####அறிவோம்####
கண்ணன் பாட்டு 14. கண்ணன் என் காதலன் - 5. (பிரிவாற்றாமை) ராகம் - பிலஹரி ஆசை முகமறந்து போச்சே - இதை ஆரிடம் செல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகமறக்க லாமோ? ... 1 கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் கண்ண னழகுமுழு தில்லை நண்ணு முகவடிவு காணில் - அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ... 2 ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினையெப் போதும். ... 3 கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ ? ... 4 தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த வைய முழுதுமில்லை தோழி! . ... 5 கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக் கண்க ளிருந்து பயனுண்டோ ? வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி வாழும் வழியென்னடி தோழி? ... 6