####அறிவோம்####
கண்ணன் பாட்டு 7. கண்ணன் எனது சற்குரு. புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், பக்தி சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு சங்கையில் லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில் மாத்திரம் எந்த வகையிலும் - சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும் ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. . ... 1 நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல நாட்கள் அலைந்திடும் போதினில், - நிறைந் தோடும் யமுனைக் கரையிலே - தடி ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி கூடு முகமும், தெளிவுதான் - குடி கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே - பல சங்கதி பேசி வருகையில், ... 2 என்னுளத் தாசை யறிந்தவர் - மிக இன்புற் றுரைத்திட லாயினர் -தம்பி, நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர் நித்திய மோனத் திருப்பவன், - உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன் தன்னைச் சரணென்று போவையில் - அவன் சத்தியங் கூறுவன் என்றனர். ... 3 மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே,...