####அறிவோம்####
சைமன் குழு சைமன் குழு (சைமன் கமிஷன், Simon Commission) பிரித்தானிய இந்தியாவில் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறியவும், அடுத்த கட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரை வழங்கவும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு குழுவாகும். 1919ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் அட்டம் (மொண்டேகு-கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்கள்) இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்து, சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசு இதை ஏற்கவில்லை; தேர்தலில் போட்டியிடவும் இந்தியாவின் நிருவாகத்தில் பங்கேற்கவும் மறுத்துவிட்டது. நீதிக்கட்சி போன்ற கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்று ஆட்சி செய்தன. இந்திய அரசுச் சட்டத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் நிறைகுறைகளை ஆராய ஒரு குழுவொன்றை அமைக்க வழிவகை செய்திருந்தது.