####அறிவோம்####
குடும்ப விளக்கு பகுதி 1 1. ஒருநாள் நிகழ்ச்சி அகவல் காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். அவள் எழுந்தாள் தூக்கத் தோடு தூங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை எழுந்ததும் எழுந்தன இருகை வீசி; தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்! கோலமிட்டாள் சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல் துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச் செங்காந் தள்நிகர் மங்கை விரலால் பெரிது செய்து விரிமலர்க் கையில் ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு, முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும், கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும் சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு கூட்டி, மெருகு தீட்டிக