தமிழ்நாடு
அரசு தொடக்கப் பள்ளியை மீட்டெடுத்த கிராம மக்கள்!
தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்க்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நிகழ்ந்துள்ளது.
சீதபற்பநல்லூரை அடுத்த கருவநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வெறும் 6 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரே அடியாக குறைந்தது.
40 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிந்த இளைஞர்களும், ஊர்மக்களும் பள்ளியை மீட்டெடுக்க போராடினர். முதற்கட்டமாக தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
6ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்தது. அடுத்தபடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் சக நண்பர்களிடம் உதவியை நாடினர். அரசுப் பள்ளிகளை மீட்டெடுப்போம் என்ற பெயரில் வாட்ஸ் ஆப்பில் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் பலனாக பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பண உதவி கிடைக்க தொடங்கியது. இதை அடுத்து ஆங்கில மொழியை பயிற்றுவிக்க மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். மேலும் வெட்டுவான்குளம், வேளான்குளம், முத்தன்குளம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்காக வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவில் பள்ளியின் தரம் உயர்த்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்....!
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை வரையறுக்கும் நிதி ஆயோக் அமைப்பின் 4 ஆவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில், ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், முதலமைச்சர்களும், துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவது, மத்திய அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்தியா
மது விலக்கால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை உயர்வு!!
பீகாரில் மது விலக்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுவுக்கு செலவாகும் பணத்தில் துணிகள், உணவுப் பொருட்கள் வாங்குவது அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமானது (Asian Development Research Institute) பீகாரில் மதுவிலக்கு அமலான 6 மாத காலத்தில் அதிகம் விற்பனையான பொருட்கள், குற்றச்செயல்கள், பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் குற்றம் பெருமளவு குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த சேலைகள் விற்பனை வீதம் ஆயிரத்து 700 விழுக்காடும், தேன் விற்பனை 380 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 சதவீதம் பேர் புதிய சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மரச்சாமான்கள், தேன், பால் பொருட்கள் விற்பனையும் உயர்ந்திருப்பதாக விற்பனை வரி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
இந்தியா 1
முருங்கைக் கீரையை நீர் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம் - ஆய்வில் தகவல்.
இந்தியா உள்ளிட்ட இடங்களில் விளையும் முருங்கைக் கீரையை நீர் சுத்திகரிப்பானாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கேர்னெகீ மெல்லன் பல்கலைக்கழம் (Carnegie Mellon University)-யில் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், முருங்கை இலை நீரைத் தூய்மைப் படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
புரோட்டீன்கள் நிறைந்த முருங்கை இலையில் டிஸ்ஸால்வ்ட் ஆர்கானிக் கார்பன் (Dissolved Organic Carbon) உள்ளதாகவும், அது நீரைத் தூய்மைப் படுத்தப் பயன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரிங்கா ஒலெய்ஃபெரா (Moringa Oleifera) எனும்வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் முருங்கை இலையை நீரைத் தூய்மைப் படுத்த பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்கு பின் அந்நீரில் மீண்டும் பாக்டீரியா வளரத்தக்கது என்பதால் அது தற்காலிகத் தீர்வு மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா 2
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம் உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மோதிரம் குஜராத் மாநிலத்தில் ஏலத்திற்கு வர உள்ளது.
தாமரை போன்று தோற்றம் அளிக்கும் அந்த மோதிரத்தில் 36 இதழ்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மொத்த எடை 58 கிராம் ஆகும். விஷால் மற்றும் குஷ்பூ விஷால் எனும் தம்பதியர் வடிவமைத்த இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.27 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏலத்தின் போது மோதிரத்தின் ஆரம்பகட்ட விலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் என்பதால் இதனை வாங்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 3
பட்டமளிப்பு விழா நடத்த மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். ஆனால் ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேர பற்றாக்குறையை காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை தவிர்த்துவிடுவதாக தெரிகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.
இந்தியா 4
கேரளாவில் பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து:
கேரளாவில் முதன்முறையாக டீசலுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 300 பேட்டரி பேருந்துகளை இயக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பேட்டரியில் இயங்கும் நவீன பேருந்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. மாநில போக்குவரத்து அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் இந்த பேருந்தின் முதல் பயணத்தை தொடங்கி வைத்தார்.
5 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்க முடியும். குளிர் சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடிநீர், கழிவறை, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி என நவீன வசதியுடன் சொகுசு பேருந்தாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து இயக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கினால் மாநிலத்தில் உள்ள பிற டீசல் பேருந்துகள் மாற்றப்பட்டு பேட்டரி பேருந்தகளை பெருமளவு இயக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் டீசல் பேருந்துகள் முதல்கட்டமாக மாற்றப்பட்டு பேட்டரி பேருந்துகளாக இயக்கப்படும்.இந்தியாவில் இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 6வது மாநிலமாக கேரளாவிலும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தியா 5
நகைகள் துறைக்கு தேசிய கவுன்சில்!
இந்தியாவில் நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் துறையை மேம்படுத்த தேசிய அளவிலான உள்நாட்டுக் கவுன்சில் அமைக்கப்படவுள்ளது. "நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள்" துறைக்கான உள்நாட்டுக் கவுன்சிலை உருவாக்குவது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு கூறினார். நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவது, உள்நாட்டில் இத்துறையை வளர்ச்சி அடையச் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக இந்த உள்நாட்டுக் கவுன்சில் பணியாற்றும்.
நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தகவலின்படி, 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஏற்றுமதி மதிப்பு 8 விழுக்காடு சரிந்து 32.72 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
அமெரிக்கா உள்பட முக்கியச் சந்தைகளில் நகைகள் மற்றும் ரத்தினக் கற்களுக்கான தேவைக் குறைந்ததாலேயே இந்தியாவின் ஏற்றுமதி சரிந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் துறை 14 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா6
கட்டுப்பாடுகளை விதித்த ஜெட் ஏர்வேஸ்!
இந்திய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி ஜெட் ஏர்வேஸில் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் எக்கனாமி வகுப்பு பயணிகள் இனி 15 கிலோ அல்லது அதற்குக் குறைவான எடை கொண்ட ஒரு பையை மட்டுமே எடுத்துச் செல்ல இயலும்.
பிரீமியர் வகுப்பு பயணிகள் 15 கிலோ அல்லது அதற்குக் குறைவான எடை கொண்ட இரண்டு பைகளை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்தியாவில் விமானப் பயணிகள் எடுத்துச் செல்லும் சோதனை செய்யப்பட்ட பைகளின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதித்த முதல் விமான சேவை நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உள்ளது. அதேபோல ஜெட் பிளாட்டினம் அட்டை உறுப்பினர்களும் 15 கிலோவுக்கு மிகாமல் இரண்டு பைகளை எடுத்துச் செல்லலாம்.
இந்த அட்டையைக் கொண்டு பிரீமியம் வகுப்பில் செல்லும் பயணிகள் 25 கிலோ கொண்ட பைகளை எடுத்துச் செல்லலாம். இந்த விதிகள் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்தவர்களுக்குப் பொருந்தாது என்றும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்தியா 7
ராஜஸ்தானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!
ராஜஸ்தானில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாகத் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த ஆணையம் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளது.
ராஜஸ்தானிலுள்ள கிராமங்களில் 40 விழுக்காடு பெண்கள் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். நகரங்களில் இதே வயதில் திருமணம் முடித்தவர்கள் 20 விழுக்காட்டினர் ஆவர். பாலைவனப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் ஒரு பாரம்பரிய பழக்கமாகவே உள்ளன.
இதுவரை குழந்தை திருமணத் தடைச்சட்டம், (2006)தான் இதுபோன்ற குழந்தை திருமணங்களைச் செல்லாததாக்கியுள்ளது. அதுவும் அந்தக் குழந்தை திருமண வயதிற்கு வந்த பின்னர் நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போதே அந்தக் குழந்தை திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கும். ராஜஸ்தானில் இதுபோல் 37 திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியா 8
விமானங்களில் உள்ளதை போல ரயில்களிலும் நவீன கழிப்பறை ரயில்களில், விமானங்களில் உள்ளதைப் போன்ற, அதிநவீன 'வேக்கும் பயோ' கழிப்பறைகளாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், 37 ஆயிரத்து, 411 ரயில் பெட்டிகளில், ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 965, 'பயோ டாய்லெட்' எனப்படும், தண்ணீர் தேவையற்ற கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த மார்ச்சுக்குள், மேலும், 18 ஆயிரத்து, 750 ரயில் பெட்டிகளில், பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட உள்ளன.
ஒரு பயோ கழிப்பறையின் விலை, ஒரு லட்சம் ரூபாய். இந்த திட்டத்துக்காக, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பயோ கழிப்பறைகளை, விமானங்களில் உள்ளது போல, அதிநவீன, 'வேக்கும் பயோ' கழிப்பறைகளாக தரம் உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா 9
ரயில்வே ஊழியர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வசதி!
ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்காக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ரயில்வே மருத்துவமனையில், இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு, தற்போது காகித அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை நாளடைவில், கசங்கி, பதிவு விபரம் அழிந்து விடுகிறது. இந்தப் பிரச்னையை தவிர்க்க, ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அட்டையை, ஸ்மார்ட் கார்டாக வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்த கார்டு, பணியில் உள்ளோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும், வெவ்வெறு வண்ணங்களில் வழங்கப்படும். கார்டில், ஊழியர் பணியாற்றும் கோட்டத்தின் பெயர், அடையாள அட்டை எண், பெயர், பிறந்த தேதி, வயது, பணி செய்யும் இடம் மற்றும் கார்டு காலாவதி தேதி போன்றவை பதிவிடப்பட்டிருக்கும்.
கம்யூட்டரில், ஸ்மார்ட் கார்டு எண்ணை பதிவிட்டால், ஊழியரின் அனைத்து விபரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஊழியர்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தங்களின் விபரங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
உலகம்
பிரிட்டனின் புதிய விசா நடைமுறைகளால் இந்தியர்களுக்கு நன்மை!
பிரிட்டனின் புதிய விசா நடைமுறைகளால் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பயனடைய உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு இருபதாயிரத்து எழுநூறு விசாக்கள் மட்டுமே வழங்குவது என பிரிட்டன் கட்டுப்பாடு வைத்திருந்தது. இப்போது உள்துறை அமைச்சகம் அந்த வரம்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மென்பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் பிரிட்டனுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு இந்தியத் தொழில்வணிகக் கூட்டமைப்புத் தலைவர் ராகேஷ் ஷா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கான விசா நடைமுறை சீனா உள்ளிட்ட 26நாடுகளுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. கல்வி விசா தளர்வு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. புதிய விசா நடைமுறைகள் ஜூலை ஆறாம் நாளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.
உலகம் 1
பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்கு பதில் காகித ஸ்ட்ராக்களை அறிமுகம் !
மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள தனது உணவகங்களில் பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்கு பதிலாக காதித ஸ்ட்ராக்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
பிளாடிக் ஸ்டிராக்கள் கழிவுகளோடு கலந்து இறுதியில் கடலில் சென்று கலப்பதால் கடல் ஆமைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மெக்டொனால்டு நிறுவனம் தனது அமெரிக்க உணவகங்களில் காகித ஸ்டிராக்களை அறிமுகப்படுத்தியது.
பிரிட்டனில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடைசெய்வது தொடர்பான மசோதா குறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் வரும் செப்டம்பர் முதல் காகித ஸ்டிராக்களை மெக் டொனால்ட்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகம் 2
குப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம்!
எவரெஸ்ட் சிகரத்தில், மலை ஏறுவோர் விட்டு செல்லும் குப்பையால், உலகின் உயரமான குப்பை கிடங்காக, அந்த சிகரம் மாறியுள்ளது. இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம், 29,029 அடி உயரம் உடையது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை கவுரவமாக கருதும் மலையேற்ற வீரர்கள், ஆண்டுதோறும், அதில் ஏறி வருகின்றனர்.
எவரெஸ்டில் குப்பை சேர்வதை தடுக்க,நேபாள அரசு, பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.எவரெஸ்டில் மலை ஏறும் ஒவ்வொரு குழுவினரும், குப்பை போடுவதற்கு அபராதமாக, 2.5 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்ய வேண்டும் என்றும், திரும்பி வரும்போது, அந்த குப்பையை எடுத்து வந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும், நேபாள அரசு அறிவித்தது.
இமயமலையின் மற்றொரு பகுதியில் உள்ள திபெத்தும், இதே போன்ற அபராத திட்டத்தை அறிவித்து உள்ளது. இருப்பினும், எவரெஸ்டில் குப்பை தேங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகம் 3
சீனாவுடனான உடன்படிக்கைகள் மறுபரிசீலனை - மலேசியா அறிவிப்பு சீன உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக மலேசியா அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை, ரயில்பாதைகள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்தில் மலேசியா ஒரு முதன்மையான கூட்டாளியாகும்.
மலேசியாவின் முந்தைய பிரதமர் நஜீப் ரசாக் ஆட்சியில் சீனாவின் நிதி, தொழில்நுட்ப உதவியுடன் ரயில்பாதை, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து மகாதிர் முகமது பிரதமராகப் பதவியேற்றார்.
நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் வெளிப்படைத் தன்மையற்றவை எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருவதால், சீனாவுடனான உடன்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும் எனப் பிரதமர் மகாதிர் முகமது அறிவித்துள்ளார். இதனால் சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் திட்டங்களை மாற்றவோ ரத்து செய்யவோ வாய்ப்புள்ளதால் ஒன்பெல்ட் ஒன்ரோடு திட்டத்தை மலேசியாவில் செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மகாதிர் முகமது சீனாவை விட ஜப்பானுடன் வணிக பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவது குறிப்பிடத் தக்கது.
உலகம் 4
சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்ட ரஷ்யா!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்கள் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டு ரஷ்யா ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிஷ்னி நவ்குரோட் (Nizny Novgorod) என்ற இடத்தின் வான்வெளியில் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்துடன், நீள்வட்ட வடிவிலான பொருள் ஒன்று கடந்து சென்றது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பறக்கும் தட்டும் என்றும், வேற்றுகிரகவாசிகளின் வாகனம் என்றும் பயந்து நடுங்க, அதன் பின்னரே வானில் பறந்தது ரஷ்யாவின் சோயுஸ் 2 பாயின்ட் 1 பி என்ற விண்வெளி ஓடம் என்பது தெரியவந்தது.
பிளஸ்டெஸ்க் காஸ்மோட்ரோம் (Plesetsk Cosmodrome) என்ற இடத்தில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஓடம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகப் படுத்த அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.
உலகம்5
துபாய்க்கு 48 மணி நேர இலவச பயண விசா!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோருக்காக 48 மணி நேர இலவச பயண விசாவை அந்நாடு அனுமதித்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்குச் செல்வதற்கு 48 மணி நேர இலவச பயண விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசரத் தேவைக்காகவும், குறைந்தபட்ச செலவில் அமீரகம் செல்வோருக்கும் இந்த புதிய நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
48 மணி நேரம் தவிர மேலும் தங்குவதற்கு தேவைப்பட்டால் இந்திய மதிப்பில் 930 ரூபாய் செலுத்தி பயணி விசாவின் நேரத்தை மேலும் 96 மணி நேரமாக நீட்டித்துக் கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் 6
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற இந்தியர்கள் 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போதுள்ள இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கு 151 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. எனவே இதை பெற அங்கு வாழும் வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தற்போது கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்.
2018-ம் ஆண்டு எப்ரல் 20-ந்தேதி நிலவரப்படி 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக குறுகிய காலத்தில் இ.பி.-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இதற்கே 6 ஆண்டுகளாகும்.
இளங்கலை பட்டம் பெற்று இ.பி.-3 பட்டியலில் காத்திருப்போர் கிரீன்கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும். இந்த பட்டியலில் 54,892 இந்தியர்களும், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என 60,381 பேர் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் உள்ளனர்.
இருந்தபோதிலும் இ.பி.2 பட்டியலில் கிரீன் கார்டு வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக பலர் காத்திருக்கின்றனர். இவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்கள். இப்போது கிரீன்கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்கள் கிரீன்கார்டு பெருவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் கிரீன்கார்டு கிடைக்காமல் அமெரிக்காவிலேயே இவர்கள் இறக்க வேண்டும். அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும்.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன்கார்டு வழங்க கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 684 பேரும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் உள்ளனர்.
மொத்தத்தில் ஆரம்ப நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேரும், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேரும் காத்திருக்கின்றனர்.
வர்த்தகம்
பணப்பரிமாற்ற வசதிக்கு இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் அனுமதி!!
வாட்ஸ் ஆப்பின் பேமென்ட்ஸ் எனும் பணப்பரிமாற்ற வசதிக்கு இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் அனுமதி அளித்துள்ளது. பே.டி.எம்., உள்ளிட்டவற்றுக்குப் போட்டியாக பேமென்ட்ஸை இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை அரசியல் சார்ந்த ஆய்வுக்கு பயன்படுத்தியதாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஃபேஸ்புக் வாட்ஸ் ஆப் பேமென்ட் வாடிக்கையாளரின் உள்கட்டமைப்புக்களைப் பயன்படுத்தினாலும், முக்கியத் தகவல்களை சேகரிக்கவோ, பயன்படுத்தவோ செய்யாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
போதிய விதிமுறைகளை ஆய்வு செய்த பின் அனுமதி வழங்குமாறு ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியிருந்த நிலையில், NPCI எனும் இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் 1
ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது 38 சதவீதமாக அதிகரிப்பு!
இந்தியாவில் ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது 38 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மார்க்கெட் மானிடர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் கடைகளில் ஸ்மார்ட் போன் வாங்குவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்து, ஃபிலிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் வாங்குவது 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
முதன் முறை ஆன்லைன் வாடிக்கையாளர்களும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆன்லைன் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஃபிலிப்கார்ட் 54 சதவீதமும், அமேசான் 30 சதவீதமும், எம்.ஐ. டாட் காம் 14 சதவீதமும் பங்களித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விளையாட்டு
ஸ்டட்கர்ட் டென்னிஸ்: பட்டம் வென்றார் ஃபெடரர்
ஸ்டட்கர்ட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். இதன் மூலம் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.
ஏடிபி போட்டிகளில் ஒன்றான ஸ்டட்கர்ட் கோப்பை போட்டி இறுதி ஆட்டம் நடந்தது. இதில் சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் 6-4, 7-6, என நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரனோயிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார். இது ஃபெடரர் பெறும் 98-ஆவது ஏடிபி பட்டமாகும்.
இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார். விம்பிள்டன் போட்டியில் 9-ஆவது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ள ஃபெடரருக்கு இந்த வெற்றி மிகுந்தஉற்சாகத்தை தந்துள்ளது.
செயற்கைக்கோள் / ஏவுகணை
ஸ்கந்தர் ஏவுகணைச் சோதனையை நிகழ்த்தியது ரஷ்யா!
குறைந்த தூர இலக்கை தகர்த்தழிக்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஒருபுறம் களைகட்டியிருக்க, எவ்வித முணுமுணுப்புகளுக்கும் இடமின்றி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணைச் சோதனையை நிகழ்த்தியிருக்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடங்கிய இரண்டாவது நாளில், ஏவுகணை சோதனை நடைபெற்றதாக, ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. பெயர் குறிப்பிடப்படாத இடத்தில், குறைந்த தூர இஸ்கந்தர் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியதன் வீடியோவை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
முக்கிய தினம் / வாரங்கள்
இன்று தந்தையர் தினம்..!
உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிள்ளைகளுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் தந்தையரைப் போற்றும் நாள் இந்த நாள்...
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம்!
தாயின் பெருமை குன்றில் ஒளி வீசும் ஜோதி என்றால், தந்தையின் அன்போ, குடத்தில் இட்ட விளக்கு! குழந்தையைக் கருவில் பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை!
பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்கு மகத்தானது. தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
மாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, கிரீசின் அண்டை நாடான, மாசிடோனியாவின் பெயரை, வடக்கு மாசிடோனியா குடியரசு என மாற்றம் செய்வதற்கான, வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐரோப்பிய நாடான, யுகோஸ்லாவியா, 1991ல், சிதறுண்டபோது, மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. இருப்பினும், மாசிடோனியா என்ற பெயரை பயன்படுத்த, அண்டை நாடான, கிரீஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கிரீஸ் நாட்டின் வடபகுதியும், மாசிடோனியா என அழைக்கப்படுவதால், அப்பகுதியை, புதிய நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என்ற அச்சமே அதற்கு காரணம். இதனால், ஐரோப்பிய யூனியன் மற்றும், 'நேட்டோ' அமைப்பில், மாசிடோனியா சேர்வதை, சிறப்பு அதிகாரம் மூலம், கிரீஸ் தடுத்து வந்தது.
இந்நிலையில், மாசிடோனியா அரசு, தங்கள் நாட்டின் பெயரை, 'வடக்கு மாசிடோனியா குடியரசு' என மாற்றம் செய்ய, கிரீஸ், சம்மதித்தது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தம், மாசிடோனியா - கிரீஸ் இடையே, கையெழுத்தானது. இதன்மூலம், கிரீஸ் - மாசிடோனியா இடையிலான, 27 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இறப்பு
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர். டோல்கின்னுக்கு அஞ்சலி!
பிரபல எழுத்தாளரான டோல்கினின் வாசகர்கள், அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடமிட்டு போர் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கனவுருவப் புனைவுக்கதை எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கின்.
விசித்திரமான கதாபாத்திரங்களை உருவாக்கி கதை எழுதுவதில் நிகரற்ற எழுத்தாளரான இவரது படைப்புகள் புகழ் பெற்றவை. இவர் எழுதிய கதைதான் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்(The Lord Of The Rings) என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
டோல்கின் மறைந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றி புகழ்ந்து வருகின்றனர். இதற்காக செக் குடியரசில் உள்ள டோக்ஸி (Doksy) என்ற இடத்தில் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் அவரது மற்றொரு படைப்பான பேட்டில் ஆப் தி பைஃப் ஆர்மிஸ் (Battle Of The Five Armies) என்ற கதையில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடமிட்டு போர் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
Comments
Post a Comment