நடப்பு நிகழ்வுகள் 15 - 06 - 2018
சுற்றுச்சூழல் :
எளிதில் மக்கும் பயோ - பிளாஸ்டிக்..!
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எளிதில் மக்கும் பயோ பிளாஸ்டிக் பைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் மண்வளமும், அதனை எரிக்கும் போது காற்றும் கடுமையாக மாசடைகிறது.
நிலத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழை நீரை நிலத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகின்றது.
ஒரு பிளாஸ்டிக் பை மண்ணில் புதைந்து மக்குவதற்கு 500 முதல் 1000 வருடங்கள் ஆகும் என்கிறது ஒரு ஆய்வின் அதிர்ச்சி தகவல்.
பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவை என்றாகி விட்டாலும் கூட அதன் ஆபத்து தலைமுறை கடந்தும் நீடிக்கும் என்ற அச்சத்தில் தான் பிளாஸ்டிக்கிற்கு வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிரந்தர தடையை விதித்துள்ளது தமிழக அரசு.
எளிதில் மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக் பைகளை அறிமுகப்படுத்தி பிளாஸ்டிக்கிற்கான தடையால் அதிர்ந்து கிடந்த வியாபாரிகளுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி இருக்கிறார் கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சிபி..!
அமெரிக்காவில் இருந்து தான் கண்ட பயோ பிளாஸ்டிக் பைகளின் தொழில் நுட்பத்தை இங்கு செயல்படுத்தி உள்ளார் சிபி..! எரித்தால் காகிதத்தை போல சாம்பலாகிவிடுவதையும், சுடு தண்ணீரில் போட்டு கலக்கியதும் அந்த பை சிதிலம் அடையும் காட்சிகளையும் அவர் விளக்கி காட்டினார்.
பிளாஸ்டிக்கை எரிக்கும் போது புற்று நோயை உண்டாக்கும் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு, பயோ பிளாஸ்டிக்கை எரிக்கும் போது உருவாவதில்லை.
இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை என்பதை பல்வேறு சோதனைகள் மூலம் உறுதிபடுத்திக் கொண்டதால் கோவை மாநகராட்சி இதனை பொதுமக்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன்.
மரவள்ளி கிழங்கு, காய்கறி மற்றும் உணவு கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் வழக்கமான மக்காத குப்பையான பிளாஸ்டிக்கைவிட 2 மடங்கு விலை என்பதால் தற்போது கோவை மக்கள் அதிகம் பயன்படுத்த தயங்குவதாக கூறப்படுகின்றது.
பிளாஸ்டிக் பைகளுக்கு 100 சதவீதம் மாற்றாக வந்துள்ள பயோ பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் அது மண்னுக்கு நல்ல உரமாகும் என்பதே இதன் கூடுதல் சிறப்பு..!
இந்தியா :
அதிவேகமாக டைப்பிங் செய்து அசத்தும் மூதாட்டி!
மத்தியப் பிரதேசத்தில் 72-வயதானபோதும், மூதாட்டி ஒருவர் அதிவேகமாக டைப்பிங் செய்து "சூப்பர் உமன்" என பெயரெடுத்துள்ளார்.
செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 72 வயதான மூதாட்டி லக்ஷ்மி பாய், படிவங்கள், விண்ணங்கள், கோரிக்கை மனுக்களை இந்தியில் டைப் செய்து தருகிறார்.
அதிவேகமாக டைப் செய்யும் அவரது வீடியோவைக் கண்டு, திறமையை வியந்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கற்றுக் கொள்ள வயது தடையில்லை என்பதற்கும், லட்சுமி பாயின் சுறுசுறுப்பைக் கண்டு இளைஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் உமன் எனக்கூறி ட்விட்டரில் தன்னை பற்றிய தகவலை பகிர்ந்த சேவாக்குக்கு நன்றி தெரிவித்த மூதாட்டி, தமது மகள் விபத்தில் சிக்கியபோது பெற்ற கடனை அடைக்கவே பணி செய்வதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாடு :
கட்டுமான ஊழியர்களுக்கு ஊக்கத் திட்டம்!
கட்டுமான ஊழியர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கான புதிய வரைவுக் கொள்கையை ஒன்றிய அரசு இறுதி செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் துறையாகக் கட்டுமானத் துறை உள்ளது. 2011-12 நிதியாண்டு தேசிய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் 5.02 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆனால் இவர்களில் 2.86 கோடிப் பேர் வரையில் மட்டும்தான் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உண்டாக்கும் வகையில் இலவசக் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும், அதற்கான வரைவறிக்கையை ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும் அண்மையில் ஒன்றிய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த வரைவறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுமான ஊழியர்களிடமிருந்து ஆண்டொன்றுக்குத் தோராயமாக 477.10 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து புதிய நெறிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது. தேசிய மாதிரி ஆய்வறிக்கையின் படி நாட்டின் நான்கு மாநிலங்களில் மட்டும்தான் 2000 ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது.
சுமார் 20 மாநிலங்களில் 1000 ரூபாய்க்குக் குறைவாகத்தான் வசூல் செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக மணிப்பூரில் 113.86 ரூபாயும், ஜார்கண்டில் 134.82 ரூபாயும், தமிழ்நாட்டில் 135.84 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் கட்டுமான ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திருமணச் செலவுகள், ஓய்வூதியம் மற்றும் மகப்பேறு செலவுகள் போன்றவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தகம் :
இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யும் Soft Bank நிறுவனம்!
ஜப்பானின் சாஃப்ட் பேங்க் (Soft Bank) நிறுவனம் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் (100 Billion Dollar) வரை முதலீடு செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான மத்திய அரசுடான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாற்று எரிசக்தித் திட்டத்தின் கீழ் வரும் 2022க்குள் 100 ஜிகா வாட் (GW - Giga Watt) சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தற்போதைய உற்பத்தியை விட 5 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் சூரியஒளி மின் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு, சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் முதலீடு பெருமளவு பயன்படும் என கூறப்படுகிறது.
சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்திருக்கும் சவுதி அரேபிய அரசு, அந்நாட்டில் சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
வர்த்தகம் 1 :
Vodafone - Idea இணைப்பிற்கு அடுத்த சில நாட்களில் ஒப்புதல்!
வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை, அடுத்த சில நாட்களில், ஒப்புதல் அளிக்க உள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், வோடஃபோன்-ஐடியா இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கையெழுத்திடவுடன், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைவதற்கு அனுமதியளிக்கும் ஆவணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இருபெரும் செல்பேசி சேவை நிறுவனங்களான வோடஃபோனும், ஐடியாவும் ஒன்றாக இணைக்கப்படுவது, உலகளவில், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக உதவிடும். வருகிற 26ஆம் தேதி நடைபெறும் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தில், புதிய பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
வர்த்தகம் 2 :
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த மே மாதத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
இதுஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி விற்பனை வளர்ச்சி கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் 20 புள்ளி 2 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் இறக்குமதி 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாகவே, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக, ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றும் மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
வர்த்தகம் 3 :
சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரையில் வரி விதிக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரையில் வரி விதிக்க திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் வழங்கி அறிவித்திருக்கிறார்.
இதன்படி, சீனாவிலிருந்து, 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரையில், இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 25 சதவிகிதம் வரையில் வரிவிதிக்கப்படும். ஏற்கனவே, அமெரிக்காவிலிருந்து சீனாவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டு வந்தது. அப்போது, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, இரண்டரை விழுக்காடு மட்டுமே அமெரிக்கா வரி விதித்து வந்தது.
இதனை ஆட்சிப்பொறுப்பேற்றதும் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 800 பொருட்களுக்கு, அந்நாட்டில் உள்ளது போன்றே 25 விழுக்காடு வரிவிதிக்க முடிவு செய்து அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அறிவித்திருக்கிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி, அவர்கள் வழியிலேயே கடுமையாகத் தரப்படும் என்றும் கூறியிருக்கிறது.
கூட்டம் :
நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாகக் கூட்டம்!
நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாகக் கூட்டத்தை பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தவுள்ளார்.
ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக்குவது, ஆயுஷ்மான் பாரத் எனும் சுகாதாரத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
உலகம் :
அமெரிக்காவின் சிக்காக்கோவில் அதிவேக போக்குவரத்து வசதி !
எலான் மஸ்கின் போரிங் எனும் சுரங்க உள்கட்டமைப்புத் தொழில் நிறுவனம், அமெரிக்காவின் சிக்காக்கோவில் அதிவேக போக்குவரத்து வசதியைக் கட்டமைக்கவுள்ளது.
சிக்காக்கோ மேயர் ரஹ்ம் இமானுவேலும் (Rahm Emanuel), டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். சிக்காகோ லூப்பில் இருந்து ஓஹாரே சர்வதேச விமான நிலையத்துக்கு ஸ்கேட்ஸ் எனும் சுரங்க அதிவேகப் போக்குவரத்து வசதி கொண்டுவருவது குறித்து விவரிக்கப்பட்டது.
வழக்கமாக சுமார் அரைமணி நேரம் எடுக்கும் பயண தூரம்பண்ணிரெண்டே நிமிடங்களில் முடியும் என்றும், 30 விநாடிகளுக்கு ஒரு ஸ்கேட் தலா 16 பயணிகளை சுமந்து கொண்டு இடை நிறுத்தமின்றி, விமான நிலையத்துக்குப் பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 240 கிலோ மீட்டர் வேக ஸ்கேட் பயணத்துக்கு, வாடகை கார் பகிர்வுக் கட்டணத்தைவிட குறைவான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் 1 :
வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு
வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டின் துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை தேர்வு செய்துள்ளார்.
வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.
இருப்பினும், அந்நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். இந்நிலையில், மந்திரி சபையில் மதுரோ சில மாற்றங்கள் செய்துள்ளார்.
அதன்படி அந்நாட்டின் துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்துள்ளார். டெல்சி அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.
உலகம் 2 :
தலைகீழாக பயணித்த விமானம்
ஆஸ்திரேலியாவின் 'குவாண்டா' நிறுவன விமானம், இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, காற்றின் சுழற்சியால் அதன் மீது மோதுவது போல மற்றொரு விமானம் வந்தது கடைசி நேரத்தில் அறியப்பட்டது.
இரண்டும் மோதுவதை தடுக்க, ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே குவாண்டா விமானத்தை இறக்க விமானிகள் துரிதமாக முடிவெடுத்தனர். அதன்படி 20 நொடிகள் வரை விமானத்தை தலைகீழாக இயக்கிய அவர்கள், பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். என்ன நடக்கிறதென அறியாமல் பயணிகள் குழப்பமடைந்தனர்.
பின்னர், பயணிகளுக்கு நடந்தவை குறித்து விளக்கப்பட்டதாக குவாண்டோ விமான நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. நடுவானில் ரோலர்கோஸ்டரில் சென்றது போல இருந்ததாகவும், நிலைமையை விமானிகள் சிறப்பாக கையாண்டதாகவும் பயணிகள் கூறினர்.
உலகம் 3 :
அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்படலம்
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. 1992-ம் ஆண்டு முதல் 3 டிரில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடல் மட்டம் உயரவும், கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் 3 டிரில்லியன் டன் பனியில், ஐந்தில் இருமடங்கானது கடந்த 5 ஆண்டுகளில் உருகியுள்ளது இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றொரு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2012-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என பனி உருகும் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நுாற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.
உலகம் 4 :
ரஷ்யா செல்கிறார் கிம் ஜாங் உன்
ரஷ்ய அதிபர் அழைப்பின் பேரில் விரைவில் ரஷ்யா செல்கிறார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் ஆகியோர் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இதையடுத்து அணு ஆயுதத்தை ஒழித்திட இரு தரப்பிலும் உறுதி ஏற்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் அழைப்பின் பேரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்க் உன், வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளன.
இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க உள்ளதாக வட கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
நியமனங்கள் :
சான் பிரான்சிஸ்கோ மேயராக கறுப்பின பெண் தேர்வு
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக கறுப்பின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்ற லண்டன் ப்ரீட் , மேயராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமிதமும், தன்னடக்கமும் கொள்வதாக குறிப்பிட்டார்.43 வயதான அவர், சிறு வயதில் ஏழ்மையான சூழலில் அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு :
இங்கிலாந்து சூப்பர் லீக் டி20 போட்டியில் முதல்முதலாக விளையாடவுள்ள இந்திய வீராங்கனை!
இங்கிலாந்து கியா சூப்பர் லீக் டி20 போட்டியில் முதல்முதலாக விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார் மந்தனா.
கடந்த வருடம் இந்திய வீராங்கனை ஹர்மண்ப்ரீத் கெளர், சர்ரே ஸ்டார்ஸ் அணிக்குத் தேர்வானார். ஆனால் காயம் காரணமாக அவரால் அந்தப் போட்டியில் பங்குபெறமுடியாமல் போனது.
இந்நிலையில் கியா சூப்பர் லீக் போட்டியின் நடப்பு சாம்பியன் வெஸ்டர்ன் ஸ்டார்ம்அணி, மந்தனாவைத் தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இடம்பிடித்தார் மந்தனா. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கண்காட்சிப் போட்டியில் டிரெயில்பிளேஸர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கினார்.
விளையாட்டு 1 :
சர்வதேச படகு போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி
சர்வதேச பாய்மர படகு போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிப் துறைமுகத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கோதன்பெர்க் வரை நடைபெற்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணி கடைசி நேரத்தில் ஸ்பெயின் மற்றும் சீன அணிகளை முந்தி முதலிடத்தை பிடித்தது.
போட்டியின் தொடக்கத்தில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் அணியே வெற்றிக் கோட்டை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணி கடுமையாக போராடி, முதலிடத்தை பிடித்தது.
MINI CINI - TNPSCPNUSEN.BLOGSPOT.COM
Comments
Post a Comment