நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
திருவனந்தபுரத்தில் திருநங்கையருக்கான அழகிப் போட்டி!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குயீன் ஆப் த்வயா 2018 (Queen of Dhwayah 2018) என்ற திருநங்கையருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது.
திருநங்கையர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் ஏராளமான திருநங்கையர் பங்கேற்றனர். கோட்டயத்தைச் சேர்ந்த ஸ்மிருதி சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா
சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு!!
சீசெல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் ஒப்பந்தத்தில் இந்தியா - பிரான்சு நாடுகள் கையெழுத்திட்டன.
பிரான்சு நாட்டுடன் நட்புறவில் இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான சீசெல்ஸூடன் நட்பு பாராட்டினால் முத்தரப்பு உறவு வலுப்பெறும் என இந்தியா கருதுகிறது. இதை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா
குழந்தைக்கு பெயர் சூட்ட வாக்குப்பதிவு நடத்திய தம்பதி!!
குழந்தைக்கான பெயரை சூட்ட வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் பெயர் தேர்வு செய்த தம்பதிகள் பற்றிய செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரி தாலுகாவை சேர்ந்தவர் மிதுன் பங் (வயது 34), தொழில் அதிபர். இவரது மனைவி மன்சி. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைக்கான பெயரை வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
யாக்ஷ், யுவன், யுவிக் ஆகிய 3 பெயர்களை தேர்வு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர்.
192 பேர் இதில் கலந்து கொண்டு வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப்போட்டனர். இதில், யுவன் என்ற பெயர் அதிகபட்சமாக 92 ஓட்டுகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு பெற்றோர்கள் யுவன் என பெயர் சூட்டினர்.
இந்தியா
கேரளாவில் ஆர்டர்லி நடைமுறை ரத்து!!
கேரளாவில் ஆயுதப்படை போலீஸ் துறைக்கு தலைவராக இருந்த ஏ.டி.ஜி.பி. சுதேஷ் குமாருக்கு, கவாஸ்கர் என்ற போலீஸ்காரர் டிரைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் சுதேஷ் குமாரின் மகள் ஸ்னிக்தா (வயது 28) கவாஸ்கரை கடுமையாக தாக்கியதால், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுதேஷ் குமாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்த மாநில அரசு, அவருக்கு புதிய பணி எதுவும் ஒதுக்கவில்லை. இதில் அடுத்த அதிரடியாக ஆர்டர்லி நடைமுறையையே ரத்து செய்வதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
மாநிலத்தில் உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட சேவைகளுக்கு இளநிலை போலீசார் நியமிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒரு இழிவான நடைமுறை. எனவே இந்த நடைமுறை மாநிலத்தில் முற்றிலும் நிறுத்தப்படும் என்றார்.
ஆர்டர்லி நடைமுறை ஒரு விரும்பத்தகாத நிகழ்வு என்று கூறிய பினராயி விஜயன், இதுபோன்ற மனித உரிமை மீறல்களை மாநில அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.
இந்தியா
தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!!
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.
2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
காற்றாலை மின் உற்பத்தி திறன் 3500 மெகா வாட் வரை உயரும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு !!
நடப்பு நிதியாண்டில் நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திறன் 3,500 மெகா வாட் வரை உயரும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
நிலக்கரியை எரிக்காமல், புகை கக்காமல், சாம்பலை குவிக்காமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பசுமை எரிசக்தி ஆகும். பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.
நம் நாட்டில் 2022ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை 1,75,000 மெகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை 60,000 மெகா வாட்டாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி திறன் 3,000 முதல் 3,500 மெகா வாட் வரை அதிகரிக்கும் என கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா முன்னறிவிப்பு செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) காற்றாலை மின் உற்பத்தி திறன் 1,700 மெகா வாட் அதிகரித்தது.
இந்தியா
பாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை!
பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜோத்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சர்பூர், குடியுரிமை சான்றிதழ்களை வழங்கினார். பயனாளிகள் சான்றிழிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை அரசு மற்றும் பொதுமக்கள் முன் வைப்பதில் சீமந்த் லோக் சங்கதன் என்ற தன்னார்வ தொண்டுஅமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஹிந்து சிங் சோடா கூறும்போது, “இவர்களுக்கு குடியரிமை வழங்குவதற்கான ஆணை 2016 டிசம்பரிலேயே பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியுரிமைக்காக காத்துள்ளனர்” என்றார்.
தமிழ்நாடு
கீழடி அகழாய்வில் பழங்கால அடுப்பு!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் அகழாய்வில் பழங்கால அடுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடக்கிறது. மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களின் தொடர்ச்சியாக பொருட்கள் கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் வித்தியாசமாக கிடைத்துள்ளன. தற்போது உறை கிணறுக்கு வெகு அருகே பழங்கால அடுப்பு கிடைத்துள்ளது. அடுப்பை பாதுகாக்கும் வண்ணம் மேலே கூரை போடுவதற்கு வசதியாக நான்குபுறமும் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள அடுப்புகள் போல தோற்றமளித்தாலும் இதன் மேல் பானை வைத்து சமையல் செய்ய வாய்ப்பில்லை, இறைச்சி உள்ளிட்டவற்றை சுட்டு சாப்பிட்டு இருக்க வாய்ப்புண்டு என கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உறைகிணறுக்கு வெகு அருகே அடுப்பும் கிடைத்திருப்பதால் இங்கு சமையல் பணி நடந்திருக்க வாய்ப்புண்டு.
எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், பெண்கள் பயன்படுத்தும் விலங்குகளின் எலும்பில் ஆன சீப்பு, ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாடு
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்!!
பல்கலைக் கழகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த உள்ளது.
இப்பயிற்சி மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். எதிர்வரும் எஸ்எஸ்சி பட்டதாரி நிலையிலான முதல்நிலை தேர்வுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக போட்டித்தேர்வுக்கான முன் ஆயத்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும், சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்க உள்ளது.
தமிழ்நாடு
தாம்பரம் நகராட்சியில் நுண் உரம் தயாரிக்கும் செயலாக்க மையம் தொடக்கம்!!
தாம்பரம் நகராட்சியில் நுண் உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தயார் செய்யப்படும் உரம், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நகரைத் தூய்மையாக்கும் வகையில் குப்பை மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் ஊக்குவிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நகராட்சியின் 20 இடங்களில் ரூ. 6 கோடியே 60 லட்சம் மதிப்பில் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலாக்க மையம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம்
விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்!!
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான விசா மீது இருந்த கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளையும் விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர், வேலை தேடுபவர்கள் உள்ளிட்ட பலருக்குமான விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை வழங்குவதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாணவர்களின் கல்விக்காலம் வரை விசா அளிக்கப்பட்டிருக்கும். இந்த நிலை தற்போது தகர்த்தப்பட்டு, கல்விக்காலம் முடிந்து மேலும் 2 ஆண்டுகள் அங்கு தங்குவதற்காக விசா நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தும் வேலை தேடுவதற்காக அங்கு தங்கி இருப்பவர்களுக்கு, கூடுதலாக 6 மாத கால விசா வழங்கப்பட்டு, அவர்களாக நாட்டை விட்டு வெளியேற அவகாசம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைவதை தடை செய்யும் சட்டத்தையும் நீக்கியுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் தாமாக வெளியேறவும் 2 ஆண்டுகள் கால அவகாசமும் அளிக்கப்படுகிறது.
விசாவை புதுப்பிக்க வேண்டியவர்கள் நாட்டில் இருந்தபடியே புதுப்பிக்கும் வழிவகையும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!!
ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.
ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார்.
சமூக நலனுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்களின் மன உளைச்சலை சரிசெய்ய யோகா உதவும் என ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் பாராளுமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
உலகம்
கட்டாயமாக வீடியோ கேம்ஸ் ஆடுவது புதிய மனநோய் - ஆய்வில் தகவல்!!
சிறிய இடைவெளிகளில் அவ்வப்போது கட்டாயமாக வீடியோ கேம்ஸ் ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் மனநோயின் தாக்கம் சார்ந்த பிரச்சனையாகும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக சுகாதார நிறுவனம் திருத்தப்பட்ட சர்வதேச நோய் குறியியல் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த புதிய பட்டியலில் சிறிய இடைவெளிகளில் அவ்வப்போது கட்டாயமாக வீடியோ கேம்ஸ் ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் புதிய மனநோயின் தாக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த ‘கேமிங் டிஸார்டர்’ என்னும் மனநோய் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் மனவளத்துறை இயக்குனரான சேகர் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்!
உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, அபார சாதுர்யத்துடன் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் அதிவேகக் கணினியை அமெரிக்க விஞ்ஞனிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த நாட்டின் எரிசக்தித் துறையைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணினி, நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) கணக்கீடுகளை செய்ய வல்லது ஆகும். இதுவரை ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்கவம் உருவாக்கிய அதிசக்தி வாய்ந்த டைட்டன் கணினியைவிட இது 8 மடங்கு அதிக வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மிட் என்று பெயரிடப்பட்டுள்ள அதிவேகக் கணினியின் மூலம் எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் இதுவரை இல்லாத அதீத ஆற்றலுடன் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தரவரிசை
உலகில் மிக ஆபத்தான சுற்றுலா தலங்கள் பட்டியலில் தாய்லாந்து முதலிடம். உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் மிக பிரபலமான சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டது.
அந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலா தலங்கள் குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இங்குள்ள கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் உள்ளன. இருந்தாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக மிக அதிகம்.
கடந்த ஓராண்டில் மட்டும் 23 சதவிகித சுற்றுலா பயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர். இங்கு செல்ல விரும்புவோர் முன்னதாக அங்குள்ள சுற்றுலா தளங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பயணத்துக்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தாய்லாந்துக்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர, சிலி, நேபாளம், பெரு, பகாமாஸ், மற்றும் பிரேசில் நாடுகளம் இந்த பட்டியலில் உள்ளன.
தரவரிசை
ஐசிசி தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்தது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, 34 வருடத்தில் இல்லாத பெரும் சரிவை தற்போது சந்தித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவை ஆஸ்திரேலிய அணி கண்டுள்ளது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 6-ஆம் இடத்துக்கு சரிந்தது. முன்னதாக, 1984-ஆம் ஆண்டு கடைசியாக 6-ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலக சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலியா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி முதலிடத்தில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 15 ஒருநாள் போட்டிகளில் 13-ல் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஐசிசி ஒருநாள் தரவரிசை பின்வருமாறு:
அணி தரவரிசை புள்ளிகள்
இங்கிலாந்து 1 124
இந்தியா 2 122
தென் ஆப்பிரிக்கா 3 113
நியூஸிலாந்து 4 112
பாகிஸ்தான் 5 102
ஆஸ்திரேலியா 6 102
வங்கதேசம் 7 93
இலங்கை 8 77
மேற்கிந்திய தீவுகள் 9 69
ஆப்கானிஸ்தான் 10 63
மாநாடுகள்
11-வது உலக இந்தி மாநாடு!!
11-வது உலக இந்தி மாநாடு மொரிசியஸில் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ‘இந்தி உலகமும் இந்தியக் கலாச்சாரமும்’ என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் இந்தி மொழி அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக இந்தி மாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்துகிறது. 10-வது உலக இந்தி மாநாடு, 2015-ம் ஆண்டு போபாலில் நடைபெற்றது.
இறப்பு
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிவி.தனபாலன் காலமானார்
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.தனபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். நாகை மாவட்டம் செய்தூர் கிராமத்தில் 1953-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த தனபாலன், சீர்காழியில் பள்ளிப் படிப்பையும் மயிலாடுதுறையில் பட்டப் படிப்பையும் முடித்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மூத்த நீதிபதியாக பணியாற்றிய அவர், கடந்த 2015-ம் ஆண்டு மே 1-ம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
நியமனங்கள்
கொலம்பியாவின் அதிபராகிறார் 41 வயதே ஆன இவான் டியூக்!!
கொலம்பியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவான் டியூக் 54 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம், 41 வயதே ஆன இவான் டியூக் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெயரையும் டியூக் பெற உள்ளார்.
நியமனங்கள்
ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமனம்!!
ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கொச்சார் மீது முறைகேடு புகார் எழுப்பப்பட்டுள்ளதால் வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தீப் பாக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இதன்பின், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் வீடியோகான் நிறுவனம் முறைகேடாக பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோகான் பெற்ற கடனில் சுமார் ரூ.2800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சந்தா கொச்சாரின் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர் என இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழு குற்றம்சாட்டியது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரத்யேக குழுவை அமைக்கப்போவதாகவும் வங்கி நிர்வாகம் அறிவித்தது. இந்த குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் பாக்ஷி இதற்கு முன்னா் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
ஸ்காட்லாந்து அணியின் ஆலோசகராக ஹீத் ஸ்ட்ரீக் நியமனம்!!
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடருக்கான ஸ்காட்லாந்து அணியின் ஆலோசகராக ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஸ்காட்லாந்து அயர்லாந்துக்கு எதிரான விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது.
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. ஒரு ஆட்டம் நாளையும், மற்றொரு ஆட்டம் 20-ந்தேதியும் நடக்கிறது. இதில் ஸ்காட்லாந்து அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகக்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக்கை ஆலோசகரான நியமித்துள்ளது.
நியமனங்கள்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்!!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்க மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
தங்க தமிழ்செல்வன், வி.வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார். இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது. பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலாவை நியமித்து மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் உத்தரவிட்டார்.
கடந்த 2002-ல் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2011-ல் நியமிக்கப்பட்டு, 2013-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் பெண்கள் முன்னேற்றம், கைதிகள் மறுவாழ்வு, விபத்து இழப்பீடு, விவாகரத்து போன்ற வழக்குகளில் பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை நீதிபதி எஸ்.விமலா வழங்கியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
விளையாட்டு
பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார் கேப்டன் தினேஷ் சண்டிமால்!!
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், இனிப்பு மிட்டாயை வாயில் சுவைத்து, எச்சிலை பந்தின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடத்தை விதிமுறைகளை சண்டிமால் மீறி விட்டதாகவும் ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. விசாரணை நடத்தவும், சண்டிமால் மீது நடவடிக்கை எடுக்கவும் ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை சண்டிமால் மறுத்துள்ளார்.
விளையாட்டு
உலககோப்பை கால்பந்து - அரையிறுதிக்கு நுழையும் நாடுகளை அறிய பன்றி மூலம் ஆருடம்!!
உலக கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு நாடுகள் குறித்து பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டதில் எந்தெந்த அணி என்பது தெரியவந்துள்ளது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரை இறுதிபோட்டியில் நுழையும் 4 நாடுகளை தெரிந்துகொள்ள தற்போது பல்வேறு ஆருடங்கள் மூலம் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்தில் டெர்பிஷையர் பகுதியில் ஒரு பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹெஜ்கிராமத்தை சேர்ந்த ஸ்டீவன்ஸ் என்பவர் தனது பண்ணையில் 100 பன்றிகளை வளர்க்கிறார்.
அதில், மார்கஸ் என்ற ஒரு சிறிய பன்றி மூலம் ஆருடம் நிகழ்த்தப்பட்டது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகள் குத்தப்பட்ட ஆப்பிள்கள் இந்த பன்றிக்கு உணவாக வைக்கப்பட்டது.
அந்த பன்றி பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகளின் கொடிகள் குத்திய ஆப்பிள்களை மட்டும் சாப்பிடவில்லை. மற்ற அனைத்தையும் சாப்பிட்டு விட்டது.
எனவே அரையிறுதி போட்டியில் பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகள் இடம்பெறும் என நம்பபடுகிறது. இப்பன்றியின் கணிப்பு சரியாக இருக்கும் என அதன் உரிமையாளர் ஸ்டீவன்ஸ் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலையும் இப்பன்றி சரியாக கணித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2010 உலககோப்பை கால்பந்து போட்டியின் போது பால் என்ற ஆக்டோபஸ் வெற்றியாளரை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
இம்ரான் தாஹிருக்கு ஓய்வு!!
இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டடுள்ளது. இளம் வீரரான ஜூனியர் டாலா அணியில் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரெயொரு போட்டி கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.
இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக கேஷவ் மகாராஜ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் டாலாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள
வீரர்கள் விவரம்:-
1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. ஜூனியர் டாலா, 4. டி காக், 5. டுமினி, 6. ஹென்ரிக்ஸ், 7. கிளாசன், 8. கேஷவ் மகாராஜ், 9. ஏய்டன் மார்கிராம், 10. டேவிட் மில்லர், 11. வியான் மல்டர், 12. லுங்கி நிகிடி, 13. பெலுக்வாயோ, 14. காகிசோ ரபாடா, 15. ஷம்சி.
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசம் அடுத்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 4-ந்தேதி முதல் ஜூலை 16-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. தமிம் இக்பால், 3. இம்ருல் கெய்ஸ், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. லித்தோன் தாஸ், 7. மொமினுல் ஹக்யூ, 8. மெஹிதி ஹசன், 9. தைஜூல் இஸ்லாம், 10. கம்ருல் இஸ்லாம் ரஃபி, 11. ருபெல் ஹொசைன், 12. நுருல் ஹசன், 13. அபு ஜெயத் சவுத்ரி, 14. நஸ்முல் ஹொசைன் ஷன்டோ, 15. ஷபியுல் இஸ்லாம்.
விருதுகள்
கண்டக்டருக்கு விருது!!
ஹிமாச்சல பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில், கண்டக்டராக பணிபுரியும், ஜோகிந்தர் சிங், 13 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல், பணிக்கு வருவதுடன், தனக்கு வழங்கப்படும் விருதையும், நேரில் பெற மறுத்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2005ல், மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில், கண்டக்டர் பணியில் சேர்ந்த ஜோகிந்தர், இது வரை, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிக்கு வருகிறார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மற்றும் பண்டிகை நாட்களிலும், இவர் விடுப்பு எடுத்ததில்லை. ஜோகிந்தரின் பதிவேட்டில், 303 வார விடுமுறை நாட்கள் சேர்ந்துள்ளன. அதற்காக அவர், எந்தவிதமான சலுகையும் பெற விரும்பவில்லை. 2011ல், இவரது சேவையை, மாநில அரசு பாராட்டி, பரிசு வழங்கியது.
தற்போது, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, மாநில அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில், அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, விடுப்பு எடுக்க வேண்டும் என்பதால், தனக்கு பதில், தன் தந்தை, விருதை பெற்றுக் கொள்வதாக, ஜோகிந்தர் கூறியுள்ளார்.
இராணுவம் / பாதுகாப்பு
தென் கொரிய, அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்தம்!!
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தென் கொரிய, அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்தி வைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தென் கொரியாவும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
வடகொரியாவுடன் நட்பு பாராட்டும் விதமாக அமெரிக்காவுடன் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ள கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தாங்கள் வரவேற்பதாகவும், அதே முடிவை தாங்களும் எடுத்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment