####அறிவோம்####
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) இந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசியவாதிகள் துணிச்சலான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெற முடியும் என்று நம்பினர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் ஆகிய மூவரும் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானவர்கள்.
தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் 1. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் மிதவாதிகள் பெறத்தவறினர்.
2. 1896 - 97 ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும், பிளேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர்.
3. மக்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியது.
4. நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.
5. 1904 - 05 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போரில் ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் வென்றது. இதனால், ஐரோப்பிய நாடான பிரிட்டனை இந்தியர்களாலும் வெல்லமுடியும் என ஊக்கம் பிறந்தது.
6 கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
- அவர் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை (1899) கொண்டு வந்து இந்தியரின் அதிகாரத்தை குறைத்தார்.
- பல்கலைக்கழகங்கள் சட்டம் (1904) பல்கலைக்கழக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சித் தன்மை குறைக்கப்பட்டது. அவை அரசின் துறைகளாக மாற்றப்பட்டன.
- இராச துரோகக் குற்றச் (ஆஆஅ) சட்டம், அதிகாரிகள் ரகசிய காப்புச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தது.
- அவரது மோசமான நடவடிக்கை வங்கப் பிரிவினையாகும் (1905)
தீவிரவாதிகளின் முதன்மை குறிக்கோள் தீவிரவாதிகளின் தலையாய குறிக்கோள் சுயராஜ்யம் அல்லது முழு விடுதலையே தவிர வெறும் தன்னாட்சி அல்ல.
தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் பிரிட்டிஷாரின் நீதியுணர்வில் தீவிரவாதிகள் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. எப்படி பிரிட்டிஷார் பலவந்தமாக இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். அரசியல் உரிமைகளை போராடித்தான் பெறவேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். தன்னம்பிக்கையும் தன் முனைப்பும் அவர்களது உணர்வில் ஊறியிருந்தன.
தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் வருமாறு: 1. அரசு நீதிமன்றங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது.
2. சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது; அந்நியப் பொருட்களை வாங்க மறுப்பது.
3. தேசியக் கல்வியை அறிமுகப்படுத்தி வளர்ப்பது.
பால கங்காதர திலகர்
தீவிரவாதிகளின் தலைவர்கள் பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ் போன்ற தலைவர்கள் தீவிரவாத தேசிய இயக்கத்தை முன்னின்று நடத்தினர்.
இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு முழுமையான இயக்கத்தை தோற்றுவித்தவர் பால கங்காதர திலகர் ஆவார். அவரை 'லோக மான்ய திலகர்' என்றும் அழைப்பர். மராட்டா மற்றும் கேசரி என்ற வார இதழ்களின் வாயிலாக பிரிட்டிஷாரின் கொள்கைகளைச் சாடினார். தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக பிரிட்டிஷாரால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1908ல் 6 ஆண்டு கால சிறை வாசத்திற்காக மாண்ட்லே கொண்டு செல்லப்பட்டார். 1916ல் பூனாவில் தன்னாட்சி கழகத்தை அமைத்தார். "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
லாலா லஜபதிராய் "பஞ்சாபின் சிங்கம்" என்று பலராலும் அறியப்பட்டவர். சுதேசி இயக்கத்தில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அமெரிக்காவில் 1916ல் தன்னாட்சி கழகத்தை லஐபதி ராய் தோற்றுவித்தார். அரசுக்கெதிரான பிரச்சாரத்துக்காக மாண்ட்லே சிறையில் வைக்கப்பட்டார். சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்து 1928 நவம்பர் 1ல் உயிர் நீத்தார்.
லாலா லஜபதிராய்
பிமின் சந்திரபால் ஒரு மிதவாதியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தீவிரவாதியாக மாறியவர். சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டு முக்கிய பங்காற்றினார். தனது அனல் பறக்கும் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் தேசியத்தை நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்பினார்.
மற்றொரு தீவிர தேசியவாதியான அரவிந்த கோஷ் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அதற்காக சிறைப்படுத்தப்பட்டார். விடுதலையான பிறகு பிரஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.
வங்கப்பிரிவினையும் தீவிரவாத எழுச்சியும்
அரவிந்த கோஷ்
இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரவாதம் தோன்றுவதற்கு 1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை ஒரு தீப்பொறியாக அமைத்தது. கர்சனது உண்மையான குறிக்கோள்கள்;
- இந்திய தேசியத்தின் அடித்தளமாக விளங்கிய வங்காளத்தில் வளர்ந்துவரும் தேசியத்தின் வலிமையை முறியடித்தல்.
- வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைப்பது.
- தான் நினைத்ததை சாதித்து பிரிட்டிஷ் அரசின் வலிமையை வெளிப்படுத்துவது.
1905 அக்டோபர் 16 ஆம் நாள் வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. அன்றே வங்காள மக்கள் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தி அன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்தனர். வங்காளத்தின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இந்தியாவில் உண்மையான விழிப்புணர்வு வங்கப் பிரிவினைக்குப் பின்புதான் தோன்றியது என்று காந்தி எழுதினார். பிரிவினை எதிர்ப்பு போராட்டம் சுதேசி இயக்கமாக வலுப்பெற்று இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
தீவிர தேசியவாதிகளின் செயல்பாடுகள் மிதவாதியான தாதா பாய் நௌரோஜியையே 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் குறித்து பேசவைத்தது. அந்த மாநாட்டில் சுதேசி அந்நியப் பொருட்களுக்கு தடை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மிதவாதிகள் இதனால் களிப்படையவில்லை. மாறாக, அரசியலமைப்பு ரீதியாகத்தான் சுயராஜ்யம் வெல்லப்படவேண்டும் என்று அவர்கள் கருதினர். இத்தகைய கருத்து மோதல்களால்தான் 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது. இதுவே சூரத் பிளவு எனப்படுகிறது. திலகர் தலைமையில் தீவிரவாதிகள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
தாதா பாய் நௌரோஜி
சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் பல்வேறு திட்டங்களைக் கொண்டதாகும். அரசுப் பணி, நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல், அந்நியப் பொருட்களை வாங்க மறுத்து சுதேசிப் பொருட்களை வாங்கி ஆதரித்தல், தேசியப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தேசியக் கல்வியை வளர்த்தல் ஆகியன இத்திட்டங்களில் அடங்கும். சுதேசி இயக்கம் ஒரு அரசியல் பொருளாதார இயக்கமாகும்.
சுதேசி இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது. வங்காளத்தில் பெரும் நிலச்சுவான்தார்களும் இதில் பங்கேற்றனர். மகளிரும், மாணவரும் மறியலில் ஈடுபட்டனர். அந்நிய காகிதத்தாலான கையேடுகளை மாணவர்கள் மறுத்தனர்.
சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்காக பல சட்டங்களையும் இயற்றியது. சுதேசி தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். வந்தே மாதரம் முழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களின் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளாமலிருக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டன. இல்லையென்றால் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. சிலர் தங்களது அரசு பணிகளை இழந்தனர். தீவிரவாத தலைவர்களான பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தீவிரவாதிகளின் சாதனைகள்
தீவிரவாதிகளின் சாதனைகளாக பின்வருவனவற்றை தொகுத்துக் கூறலாம்.
1. சுயராஜ்யத்தை பிறப்புரிமையாக முதலில் கோரியவர்கள் தீவிரவாதிகளேயாவர்.
2. விடுதலை இயக்கத்தில் மக்களை பெருமளவில் ஈடுபடுத்தியது மற்றொரு சாதனையாகும். தேசிய இயக்கத்தின் சமூக அடிப்படை மேலும் விரிவாக்கப்பட்டது.
3. முதன்முதலில் அனைத்து இந்திய அரசியல் இயக்கத்தை (சுதேசி இயக்கம்) அமைத்து நடத்தியது போற்றத்தக்கதாகும்.
முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்படுதல் (1906)
1906 டிசம்பரில் இந்தியாவெங்கிலுமிருந்து முஸ்லீம்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சேர்ந்த நவாப் சலி முல்லா என்பவர் முஸ்லீம்களின் நலன்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசைப் போலவே, அவர்களும் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி பிரிட்டிஷ் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர்.
தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ மார்லி சீர்திருத்தங்களின் போது முஸ்லிம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப்பெற்றது அவர்களது முதலாவது சாதனையாகும்.
லக்னோ ஒப்பந்தம் (1916)
1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டின்போது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிந்த காங்கிரஸ் மீண்டும் ஒன்றிணைந்தது. 1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. லக்னோ ஒப்பந்தம் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.
தன்னாட்சி இயக்கம் (1916)
1916 ஆம் ஆண்டு இரண்டு தன்னாட்சி கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் பூனாவில் திலகர் தன்னாட்சி கழகத்தை தொடங்கினார். செப்டம்பரில் அன்னி பெசன்ட் அம்மையார் சென்னையில் மற்றொரு தன்னாட்சி கழகத்தை நிறுவினார். தன்னாட்சி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளேயே இந்தியாவுக்கு தன்னாட்சி பெறுவதாகும். சுதந்திரம் என்பது அனைத்து நாடுகளுக்கும் உள்ள இயற்கையான உரிமை என்று இருவருமே நம்பினர். மேலும், இந்தியாவின் வளங்கள் அதன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்பட வில்லை என்று தன்னாட்சி இயக்கத் தலைவர்கள் கருதினர்.
இரண்டு தன்னாட்சி கழகங்களுமே தங்களுக்குள் கூட்டுறவு மனப்பான்மையோடு நடந்து கொண்டன. காங்கிரசுடனும், முஸ்லிம் லீக்குடனும் சேர்ந்து போராடின. திலகரின் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிரத்தில் கவனத்தை செலுத்தியது. அன்னி பெசன்டின் இயக்கம் இந்தியாவின் இதர பகுதிகளில் செயல்பட்டது. தன்னாட்சி இயக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது எனலாம். சுதேசி இயக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
1917 ஆகஸ்டு 20 ஆம் நாள் இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் மான்டேகு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆகஸ்டு அறிக்கை தன்னாட்சி இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
புரட்சிகர குழுக்கள்
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின. மிதவாத, தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, பல ரகசிய புரட்சி அமைப்புகளை அவர்கள் தோற்றுவித்தனர். வங்காளத்தில் 'அனுசிலான் சமிதி', 'ஜுகந்தர்' ஆகிய ரகசிய இயக்கங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரத்தில் சவார்க்கர் சகோதரர்களால் 'அபினவ பாரத் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி 'பாரத மாதா' சங்கத்தை தோற்றுவித்தார்.
பஞ்சாபில் இளைஞர்களிடையே புரட்சிக் கருத்துக்களை பரப்புவதற்கு அஜித் சிங் ஒரு ரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். லண்டனிலிருந்த இந்தியா ஹவுசில், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகளான மதன்லால் திஸ்ரா, சவார்க்கர், வி.வி.எஸ். அய்யர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றோரை ஒன்று திரட்டினார். அமெரிக்காவில் லாலா ஹர் தயாள் என்பவர் காதர் கட்சியைத் தோற்றுவித்து இந்தியாவிற்கு வெளியே புரட்சியாளர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தார்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment