நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
'மிஸ் இந்தியா' வாக மகுடம் சூடிய சென்னை பெண்!
மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி (anukreethy ) தேர்வு செய்யப்பட்டார். அவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்று வந்தது.
30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர். இறுதிச் சுற்றுப் போட்டிக்கான நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீதி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார்.
சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் பயிலும் மாணவியான அனுக்ரீத்திக்கு கடந்த ஆண்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்திரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.
இந்தியா
யோகா ஆசிரியர்களாக மாறும் 448 சிறைக் கைதிகள்!!
உத்தரபிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள 448 சிறைக்கைதிகள் விடுதலையான பிறகு யோகா ஆசிரியர்களாக பணிபுரிய உள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஷர்னபூர் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இங்கு கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யோகா குரு பாரத்பூஷன் வழி காட்டுதலின் பேரில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை ஜெயில் சூப்பிரண்டு டாக்டர் விரேஷ்ராஜ் சர்மா செய்துள்ளார். கைதிகளுக்கு தினமும் யோகாசன பயிற்சி வகுப்புகளும், செய்முறை விளக்கமும் நடத்தப்படுகிறது. இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலை ஆனதும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவர்களை யோகா ஆசிரியர்களாக்க கடும் பயிற்சி அளிக்கப்பட்டது.அதில் 448 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விடுதலையானதும் இவர்கள் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றுவார்கள். லக்னோ சிறையிலும் இதே பாணியில் கைதிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு கொலைக் கைதி கிருஷ்ணானந்த் டிவேடி யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கிறார்.
இந்தியா
கால்நடைகளை பராமரிக்க கோசாலை நடத்தும் முஸ்லிம் பெண்!!
பஞ்சாப் மாநிலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறார். லூதியானா மாவட்டம் பாயல் கிராமத்தைச் சேர்ந்த சல்மா என்பவர், காயமுற்று சாலையில் கிடந்த காளை ஒன்றை வீட்டிற்கு கொண்டுவந்து பராமரித்தார்.
பசுக்கள், எருமைகள் என காயமுற்ற கால்நடைகளுக்கு அடைக்கலம் அளித்ததால், அவரது வீடே கோசாலையாக உருவெடுத்துள்ளது. கால்நடைகளுக்கு பார்வதி, ராதா, லட்சுமி என இந்துக் கடவுள்களின் பெயர்களையே சூட்டியுள்ளார் சல்மா. கோசாலைக்கு ஆகும் மாதாந்திர செலவான 45 ஆயிரம் ரூபாயை சல்மாவின் தந்தையே வழங்கி வருகிறார்.
இந்தியா
'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது:
ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' இல்லாவிட்டால் விருது கிடையாது; சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என, தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5ல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மொத்தம், 374 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில், 20 விருதுகள், சமஸ்கிருதம், அரபு மற்றும் பெர்ஷியன் மொழி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறை, விருதுகளின் எண்ணிக்கை, 374ல் இருந்து, தேசிய அளவில், 145 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதில், 29 மாநிலங்களுக்கு, 120; ஏழு யூனியன் பிரதேசங்களுக்கு, 8; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள,மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 17 விருதுகள்வழங்கப்படும்.
தமிழகத்திற்கு, இதுவரை வழங்கப்பட்ட, 22 விருதுகள், ஆறாக குறைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழகபாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என, விருதுகள் பிரிக்கப்படாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: கேரள அரசு
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேரள மாநில அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. கேரள மாநிலம் நிபா வைரஸை தொடர்ந்து கனமழையால் மிகவும் பாதிப்படைந்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே மலைச்சரிவு போன்ற சம்பவங்களால் பல வீடுகள் அடித்தும், பல வீடுகள் சேதமும் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உட்பட 56 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.
அஃதாவது, இறந்தவர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிலம் முற்றிலும் சேதமடைந்த குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. வீடுகள் ஓரளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, இந்த பேரழிவை ஆராய்ந்து, வரும் மழைக்காலங்களில் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனி கமிட்டியை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா
பதஞ்சலி நிறுவனத்திற்கு மாநில அரசு ஒப்புதல்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.6000 கோடி செலவில் மாபெரும் உணவுப் பூங்கா அமைப்பதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 455 ஏக்கரில், ரூ.6000 கோடி செலவில் மாபெரும் உணவுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிட்டட் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இதற்கான நிலம் ஒதுக்குவதில் சுணக்கம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் உணவுப் பூங்கா அமைக்கும் திட்டத்தில் இருந்து விலகுவதாக, இரு வாரங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
அதன் விளைவாக மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் உடனடியாக செயல்பட்டு பதஞ்சலி நிறுவன வேண்டுகோளின்படி பூங்கா அமைப்பதற்குத் தேவையான நிலத்தின் குறிப்பிட்ட பகுதியானது, மூல நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத் லிமிட்டட் நிறுவனதிற்குப் பதிலாக, அதன் துணை நிறுவனமும் இந்த பூங்கா அமைக்கும் பணிகளை முன்னின்று நடத்தப் போகும் பதஞ்சலி புட் அண்ட் ஹெர்பல் பார்க் நொய்டா பேரில் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே மாநில அமைச்சரவையின் புதிய ஒப்புதல் தேவைப்பட்டது.
அதற்கு ஏதுவாக மத்திய அரசு இதற்காக முன்பு அளித்திருந்த அவகாசமான ஜுன் 15 என்பதை மாத இறுதியான ஜூன் 30 வரை மாற்றுமாறு, உத்தரப் பிரதேச அரசு நேரடியாக மத்திய தொழில் துறைக்கு கடிதம் எழுதியது.
தற்பொழுது உணவுப் பூங்கா அமைப்பதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா
நிபா வைரஸுக்கு ஃபேர்வெல்!
நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட கேரள மக்கள் அதை கொண்டாடும் வகையில் ‘பை பை நிபா’ என்ற பாடலை உருவாக்கியுள்ளனர். கேரளாவில் நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, கேரள மக்கள் நிபா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர்.
இதைக் கொண்டாடும் வகையிலும், நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசார விழா கொண்டாடும் வகையிலும், கேரளாவைச் சார்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களின் குழு சேர்ந்து இரண்டு நிமிட பாடலை உருவாக்கியுள்ளனர்.
நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அதிக மக்கள் போராடினர். அதனால், பாடல் காட்சியில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இதற்கு உதவி செய்தவர்களைப் பாராட்டும் விதமாகவும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல், கேரள மக்கள் தைரியமாக நிபா வைரஸை மேற்கொண்டதை உணர்த்தும் வகையில் உள்ளது.
இந்தியா
பயோ டாய்லெட்: மீண்டும் நிதி அறிவிப்பு!!
ரயில்களில் பயோ டாய்லெட் அமைப்பதற்காக இந்தியன் ரயில்வே 1,620 கோடி ரூபாயை மீண்டும் ஒதுக்கியுள்ளது.
இந்தியன் ரயில்களில் 136,985 பயோ டாய்லெட் அமைப்பதற்காக 1,370 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது, மேலும் மீதம் உள்ள ரயில்களில் 250 கோடி ரூபாய் நிதியில் பயோ டாய்லெட்டை அமைக்கும் பணிகளை 2019 மார்ச் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
ரயில்களில் உள்ள 2.5 லட்சம் கழிவறைகளை பயோ டாய்லெட்டாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் கழிப்பறை தூய்மையானதாக இருக்கும், தண்ணீரின் பயன்பாடு வெகுவாக குறையும். மே 31ஆம் தேதி 136,965 பயோ டாய்லெட்டுகளை 37,411 ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பயோடாய்லெட்டை பொருத்த 1 லட்சம் ரூபாய் செலவானதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு
தரமற்ற, 'எம் - சாண்ட்' விற்றால் சிறை: விதிகள் வகுக்க திட்டம்!
தரமற்ற, 'எம் - சாண்ட்' விற்பவர்களுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், புதிய விதிகளை வகுக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து மணல் எடுப்பதை, படிப்படியாக குறைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்கு மாற்றாக, வெளிநாடுகளில் இருந்து, மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் என்ற, செயற்கை மணலை பயன்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தரமான எம் - சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்ய, பொதுப்பணித் துறையால், அனுமதி வழங்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்த, எம் - சாண்ட் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும், தற்போது, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், எம் - சாண்ட் தயாரித்து, விற்பனை செய்கின்றன. இதில், 24 நிறுவனங்கள் மட்டுமே, பொதுப்பணித் துறையின் அனுமதி பெற்று, தரமான எம் - சாண்ட் தயாரிக்கின்றன.
கட்டடங்களின் பாதுகாப்பு கருதி, தரமான எம் - சாண்ட் விற்பனையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.இதற்காக, பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு சார்பில், எம் - சாண்ட் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தரமற்ற எம் - சாண்ட் விற்பனை செய்பவர்களுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. விரைவில், கொள்கை இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு
'இ - பில்'லுக்கு 10 ரூபாய் தள்ளுபடி பி.எஸ்.என்.எல்.!
'இ - பில்' பெறும் வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஊக்கத்தொகையாக, கட்டணத்தில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,க்கு, சென்னையில், 5.5 லட்சம் தரைவழி இணைப்பு; 3.5 லட்சம், 'போஸ்ட் பெய்டு' மொபைல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய சேவைக்கான கட்டண விபரம், அவர்களின் முகவரிக்கு, மாதந் தோறும் தபால் மூலம் அனுப்பப்படும்.இந்நிலையில், மாதக்கட்டண விபரத்தை, தபால் வழியாக அனுப்புவதை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்தது. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின், 'பில்' விபரத்தை, 'இ - மெயில்' வாயிலாக, 'இ - பில்'லாக அனுப்ப திட்டமிட்டு, 'கோ கிரீன்' என்ற, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இயற்கையை பாதுகாக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'கோ கிரீன்' என்ற, திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், 'பேப்பர் பில்'லுக்கு பதில், வாடிக்கையாளர்களின், 'இ - மெயில்' முகவரிக்கு, 'பில்' அனுப்பப்படும்.இதை ஊக்கப்படுத்த, வாடிக்கையாளர்களின், 'பில்' தொகையில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறோம்.
இதுவரை, 40 ஆயிரம் வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.நாங்கள், 100 சதவீதம், 'இ - பில்' வழங்க, முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'இ - மெயில்' முகவரிஇல்லாதவர்களுக்கு, பேப்பர் பில் அனுப்பப்படும்.
தமிழ்நாடு
மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வாங்கினால் மருத்துவர் தேர்வுக்குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்....!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வாங்கினால், புகார் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவர் தேர்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 445 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 355 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரத்தையும் வெளியிட்டுள்ள அதிகாரிகள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ கேட்டால், மருத்துவத் தேர்வுக் குழு செயலாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களை http://www.tnmedicalselection.org/ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு
சென்னைக்கு இன்னொரு விமான நிலையம்!
சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கிவரும் விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு என இரண்டு முனையங்கள் உள்ளன. இங்கு தற்போது விமான சேவை அதிகரித்து வருவதால் சரக்குகளை கையாள்வது மற்றும் அதனை வெளியே கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், கவுல்பஜார் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு அங்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் 2005ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. தற்போது கடைசியாக செய்யூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் நுண்கிருமிகளால் மக்கள் பாதிப்பு:
ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் உள்ள நுண்கிருமிகள் தொற்றால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சிலை பயன்படுத்துதல், அழுக்கு படிந்த கைகளால் நுண்கிருமிகள் அவற்றில் தொற்றிக் கொள்கின்றன. ஒருவேளை ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பெற்றுக்கொள்ளும் கையால் உணவு பரிமாறினால் கைகளை நன்றாக கழுவிய பிறகே பரிமாற வேண்டும். இதுதொடர்பாக மக்களிடையே உணவு பாதுகாப்புத் துறையினர் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
ரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் நர்சிங் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசின் 5 நிபந்தனைகள்!
1. மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும்.
2. அந்த இடத்துக்கு இரண்டு மின்னூட்டிகள் மூலம் 20 மெகாவாட் மின்சாரத்தையும், தேவையான தண்ணீர் வசதியையும் செய்து தர வேண்டும்.
3. தோப்பூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வில்லங்கம் எதுவும் இல்லாமலும், ஆக்கிரமிப்புகள் இல்லாமலும் மத்திய அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.
4. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் செல்லும் குறைந்த மின்அழுத்த மின்கம்பிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
5. மருத்துவமனையின் கட்டட வரைபடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் தேவையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தோப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.
2. அந்த இடத்துக்கு இரண்டு மின்னூட்டிகள் மூலம் 20 மெகாவாட் மின்சாரத்தையும், தேவையான தண்ணீர் வசதியையும் செய்து தர வேண்டும்.
3. தோப்பூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வில்லங்கம் எதுவும் இல்லாமலும், ஆக்கிரமிப்புகள் இல்லாமலும் மத்திய அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.
4. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் செல்லும் குறைந்த மின்அழுத்த மின்கம்பிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
5. மருத்துவமனையின் கட்டட வரைபடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் தேவையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தோப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.
உலகம்
இந்தியாவுடன் ராணுவ உறவுகளை பலப்படுத்தும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!
இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற மேல்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் வாக்கெடுப்பு நடந்தது. 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான இந்த மசோதாவை ஆதரித்து 85 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல் நாட்டுக்கான ஏவுகணை தடுப்பு கூட்டுறவு திட்டத்துக்கு 50 கோடி டாலர்களும், காஸா எல்லைபகுதியில் உள்ள குகைகளை அழிப்பதற்கான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் செலவினங்களுக்கு 5 கோடி டாலர்களும் ஒதுக்க இந்த மசோதா வகை செய்கிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படை நிதியாக 520 கோடி டாலர்களும், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் செலவினங்களுக்காக 35 கோடி டாலர்களும், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசுக்கு எதிரான படைகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்க 30 கோடி டாலர்களும் ஒதுக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தவும், அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், ரஷியாவிடம் இருந்து துருக்கி நாட்டு அரசு அதிநவீன S-400 ரக விமான தாக்குதல் தடுப்பு கேடயங்களை கொள்முதல் செய்தால் அமெரிக்க அதிபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி துருக்கிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம்
உலகில் 100 கோடி துப்பாக்கிகள்: ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்!
உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் பாதுகாப்புத் துறை நிபுணர் ஆரோன் கார்ப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த 2017 புள்ளிவிவரங்களின்படி உலகளாவிய அளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளன. இதில் பொதுமக்களிடம் மட்டும் 85.7 கோடி துப்பாக்கிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் 13.3 கோடி துப்பாக்கிகளையும் போலீஸார் 2.27 கோடி துப்பாக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.
சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பொதுமக்களில் அதிகமானோர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 39.3 கோடி மக்களிடம் துப்பாக்கி உள்ளது. அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியர்களிடம் சுமார் 7.11 கோடி துப்பாக்கிகள் உள்ளன. சீனர்களிடம் 4.97 கோடி துப்பாக்கிகள், பாகிஸ்தானியர்களிடம் 4.39 கோடி துப்பாக்கிகள், ரஷ்யர்களிடம் 1.76 கோடி துப்பாக்கிகள் உள்ளன.
எந்தெந்த நாடுகளின் ராணுவத்தில் துப்பாக்கிகள் அதிகம் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. சீனா, வடகொரியா, உக்ரைன் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது. இதேபோல எந்த நாட்டு போலீஸாரிடம் அதிக துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. சீனா, இந்தியா, எகிப்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது.
உலகம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது.
ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம்
ஆதாரைக் கைவிடும் ஆஸ்திரேலியா!!
இந்தியாவில் ஆதாரைப் போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட பயோமெட்ரிக் திட்டத்தைக் கைவிடுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் 2009ஆம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு தனித்தனி அடையாள எண் மற்றும் நாடுதழுவிய தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய தனது பயோமெட்ரிக் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. `இன்னோவேசன் ஆஸ்திரேலியா' ஊடகத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஆஸ்திரேலிய அரசு ரூ.40 மில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 273 கோடி) தொடங்கிய பயோமெட்ரிக் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் புலனாய்வு ஆணையம்(ACIC) 46 மில்லியன் டாலர் செலவில் 2016ஆம் ஆண்டு இந்த பயோமெட்ரிக் திட்டத்திற்கான ஒப்புதலை என்இசி நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இந்தத் திட்டத்தில் ஆதாரைப் போலவே கைரேகைகள், முக அங்கீகாரம், மற்றும் பாதச் சுவடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்யப்படவிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
அரசியல்
ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேருக்கு விடுதலை மறுக்கப்பட்டது ஏன்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டது ஏன் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏழு பேரையும் விடுவித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேரின் படுகொலை வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தால் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சதித்திட்டம் என்றும், இச்சதியை அரங்கேற்ற பெண்ணை மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிதினும் அரிதாக இந்த வழக்கு இருப்பதாகவும் நீதிமன்றங்கள் இந்த வழக்கின் பயங்கரமான பின்னணியைக் கருத்தில் கொண்டே தண்டனை வழங்கியிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விளையாட்டு
உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ரஷ்யா அணி வெற்றி!
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் ரஷ்யா மற்றும் செனகல் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதின. முதல்பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை.இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபின் 47, 59, மற்றும் 62 ஆகிய நிமிடங்களில் ரஷ்ய வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து எகிப்து அணியை திணறடித்தனர்.
73ஆவது நிமிடத்தில் எகிப்து வீரரான மொஹமது சலாஹ் பதிலுக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடாததால் 3-1 என்ற கணக்கில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, மாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் எச்-பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் மற்றும் போலந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது.
விளையாட்டு
20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்களுக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று முதலில் மூன்று போட்டிகள் அடங்கிய 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இவ்விரு அணிகளுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜாக்பால் அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியில் ஆல்–ரவுண்டர்களான சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இருவரும் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இருவரும் ஒரே போட்டியில் களம் இறங்கினால், 1999–ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் சர்வதேச போட்டியில் ஆடிய இங்கிலாந்து சகோதரர்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.
இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:–
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி.
விளையாட்டு
சிபிஎல் தொடரிலும் அசத்தவிருக்கும் நேபாளச் சிறுவன்!!
நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சானே, சிபிஎல் தொடரில் கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் ஆகியோர் அடங்கிய செயின்ட் கிட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் எனப்படும் சிபிஎல் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நீவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயதான சந்தீப் லாமிச்சானே இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடியது எனக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தற்போது எங்கள் அணிக்கு ஒருநாள் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு சர்வதேச அரங்கில் எங்கள் திறமையை நிரூபித்து விரைவில் டெஸ்ட் அந்தஸ்தை எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறினார்.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் உலக லெவன் அணிகள் மோதிய 'ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச்' போட்டியில் சந்தீப் தனது முதல் சர்வதேச டி20 கணக்கைத் தொடங்கினார். நேபாள கிரிக்கெட்டில் சர்வதேச டி20யில் பங்கேற்ற ஒரே வீரரும் இவரே. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், நேபாளத்திலிருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடி 6.83 எகானமி மற்றும் 16.4 சராசரியுடன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
விளையாட்டு
11 ஆண்டுகள் கழித்து அணிக்குத் திரும்பும் வீரர்!!
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான துஷார் இம்ரான், 11 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். `வங்கதேச ஏ' கிரிக்கெட் அணி `இலங்கை ஏ' அணிக்கு எதிராக மூன்று முதல்தர டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஜூன் 26 முதல் தொடங்கும் இந்த நான்கு நாள் டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியில் 34 வயதான துஷார் இம்ரான் இடம்பிடித்துள்ளார்.
வங்கதேச அணி சார்பில் முதல்தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் இவர் மட்டும் தான். 2002ஆம் ஆண்டு முதன் முறையாகச் சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்த இவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டெஸ்ட் மற்றும் 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் வங்கதேச அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் சர்வதேச அணிகளை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதை அறிந்து கொள்ள தற்போது அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத ஷபிர் ரகுமான், மொசட்டாக் ஹுசைன் ஆகியோரும் `வங்கதேச ஏ' அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் ரிஷாத் அஹமதும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து- கொலம்பியாவை 2-1 துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று சாதனை
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை தோற்கடித்ததே கிடையாது. முதன்முறையாக கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் அசத்தியுள்ளது.
வர்த்தகம்
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம்...!
ஆஸ்திரேலியாவில் ஐபோன்களை சரிசெய்ய மறுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆறரை மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாத ஐபோன் 6 மற்றும் அதன் முந்தைய மாடல்களில் செயல்பாடுகள் முடங்கின. பாதிக்கப்பட்டவர்களின் போன்களை ஆப்பிள் நிறுவனம் சரிசெய்து கொடுத்தது.
ஆஸ்திரேலியாவில் 275 பயனாளர்கள் தங்களது ஐபோன்கள் ஏற்கனவே பழுதானபோது, ஆப்பிள் நிறுவனத்தில் கொடுக்காமல் வேறு இடத்தில் கொடுத்து சரிசெய்ததால் மீண்டும் அதை தங்கள் நிறுவனம் சரி செய்யாது என்று கூறியது. இதை கண்டித்து தொடர்ந்த வழக்கில், ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டங்களை ஆப்பிள் நிறுவனம் மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய் அபராதமாகவும் விதித்தது.
வர்த்தகம்
இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு!!
இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பிரான்ஸைச் சேர்ந்த கேப்ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக மக்கள் தொகையுடன் உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருப்பதற்கு ஏற்ப பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்து 2.63 லட்சமாக உள்ளனர். இந்த செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 21 சதவீதம் உயர்ந்து 1 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலக அளவிலான வளர்ச்சியை விட இந்தியாவில் 12% அதிகமாக உள்ளது.
உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் அமெரிக்க, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் உள்ளனர். 2017-ம் ஆண்டின் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியா 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி டாலராகும். இந்தியாவில் பணக்காரர்களின் அதிகரிப்புக்கு, கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சி முக்கிய காரணம். மேலும் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 4.8 % வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக வளர்ந்துள்ளது போன்றவையும் காரணமாகும்.
வர்த்தகம்
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வாய்ப்பு!!
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தின் போது ரெப்பொ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் பணவீக்க விகிதம் அதிகரித்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு பொருளாதார நிபுணர்களிடம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த வாரம் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது. இதில் ஒரு பிரிவு பொருளாதார நிபுணர்கள் டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.50 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு பிரிவு பொருளாதார நிபுணர்கள் ஆகஸ்ட் மாதத்திலேயே வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம்
பசுமை மின்சக்தியை விரும்பும் இன்ஃபோசிஸ்!
2017-18ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் மின்சாரத் தேவையில் 43.7 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலமாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாடு முழுவதிலும் 46.1 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
2018ஆம் நிதியாண்டில், 109.7 மில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான மின்சக்தித் தேவை பசுமை மின்சக்தி வாயிலாகக் கிடைத்துள்ளது. இதில், 22.8 மில்லியன் யூனிட் மின்சாரம் சூரிய ஒளியியல் அமைப்பு (solar photovoltaic (PV) வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆண்டில், சென்னை, புனே, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள எங்களது வளாகங்களில் ஒரு மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி அமைப்பையும், கர்நாடகாவின் சிரா பகுதியில் 30 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தரவரிசை
பொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய கோவை மாநகராட்சிக்கு 14 ஆவது இடம்
பொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் கோவை மாநகராட்சி 14 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் நகா்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரத் திட்டத்தில் முதல்கட்டமாக தோ்வு செய்யப்பட்ட 20 நகரங்களில் கோவை மாநகரமும் இடம்பெற்றுள்ளது. இத் திட்டம் மத்திய, மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதில் முதல் 87 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. கோவை மாநகராட்சி 82.26 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 14 இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசை
பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளிய பெசோஸ்!!
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 141.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார்.
அவரது சொத்து மதிப்பானது ஜூன் 1ஆம் தேதியிலிருந்து சுமார் 5 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி பெசோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலராக இருக்கிறது. உலகின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளராக அறியப்படும் வாரன் பஃபெட், 82.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
முன்னதாக ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக முன்னேறியிருந்தார். அவரது அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மின்னணு சாதனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக அமேசான் முன்னேற்றம் கண்டிருந்தது.
ஃபார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டிருந்த தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் 177.87 பில்லியன் டாலர் மதிப்புடன் அமேசான் எட்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்
இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளிலேயே 481 ரன்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளில் ஒன்றாக திகழ்வது இங்கிலாந்து அணி. அந்த அணியின் வீரர்களும் வெற்றி பெற விடாது போராடும் குணம் கொண்டவர்கள்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி தானே முறியடித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 408 எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் அடித்துள்ளதன் மூலம் இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுச்சேரியில் 2018 - 2019ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்!!
புதுச்சேரியில் 2018 - 2019ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரிடம் வற்புறுத்தியதை அடுத்து, நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கான உதவி தொகை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிக்கு விருது!
காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தியதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த வீரபத்ரன் ராமநாதனுக்கும், முன்னாள் நாசா காலநிலை ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ஹேன்சனுக்கும் கூட்டாக தைவானின் டாங் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கும் விஞ்ஞானிகளுக்கு 2012 முதல் தைவானின் டாங் விருது வழங்கப்படுகிறது, மேலும், இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பை ஜூன்18 அன்று வெளியிட்டது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரபத்ரன் ராமநாதன் என்பவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்ப நிலைத்தன்மையில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வுக்காக ஜேன்ஸ் ஹேன்சன் மற்றும் வீரபத்ரன் ராமநாதனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. மேலும் விருதுடன் இருவருக்கும் ரூ.6½ கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு
கின்னஸில் இடம்பெற்ற உலகின் மிக வயதான ஒராங்குட்டான் மரணம் ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருக்க்காட்சிசாலையில் உள்ள 62 வயது ஒராங்குட்டானின் பெயர் புயான். உலகின் மிக வயதான ஒராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மலேசியா நாட்டில் 1956 ஆம் ஆண்டு பிறந்த புயான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சிசாலையிலிருந்து 1968 ஆம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சிசாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
பொதுவாக ஒராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதிற்கு மேல் உயிர் வாழாது என்பதால் இது சாதனையாக கருதப்பட்டது. இந்த குரங்கிற்கு 11 குழந்தைகள் மற்றும் 54 சந்ததியினர் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பரவி காணப்படுகின்றன.
Comments
Post a Comment