நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.
அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்துள்ளன. பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியாவில் மொத்தம் 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது 59). இவர் 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இந்தப் பதவி 3 ஆண்டு காலத்துக்கானது. ஆனால் 3 ஆண்டு முடிந்த பின்னரும், அந்தப் பதவியில் தொடர்ந்து வந்தார்.
இந்தியா
பாகிஸ்தானில் பிறந்த 3 சகோதரர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் வாழும் பாகிஸ்தானை சேர்ந்த 3 சகோதரர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் (முன்னாள்) ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கடண்ட்க்ஹ 1988-ம் ஆண்டு தனது தூரத்து உறவினரான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு, கணவருடன் பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினார்.
அங்கு 3 ஆண் குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண் பிற்காலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2004-ம் ஆண்டு 3 குழந்தைகளுடன் நிஜாமாபாத்தில் உள்ள பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
தனது மகன்களுக்கான விசாவை அவ்வப்போது புதுப்பித்து வந்த அந்தப் பெண் அவர்கள் மூவருக்கும் இந்தியாவில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை அளிக்கக்கோரி நிஜாமாபாத் மாவட்ட நிர்வாகத்திடம் மனு செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்தியாவில் தொடர்ந்து 7 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்து வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சியை சந்திக்கும் ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது. இதனை அடுத்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில், காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்துள்ளது பரபரப்பான ஒன்றாகியுள்ளது.
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பணிகளில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக காஷ்மீர் கவர்னர் ஆட்சியை சந்திக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் - பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.
அமர்நாத் நில விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி உடைந்தது. குலாம் நபி ஆசாத் வாபஸ் பெற்றதால், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பின், 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க இழுபறி நீடித்த நிலையில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 2016-ல் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின், சயீத்தின் மகள் மெகபூபா முப்தி முதல்வராவார் என கூறப்பட்டது. ஆனாலும், பாஜக கூட்டணிக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆட்சியமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தற்போது, பாஜக - பிடிபி கூட்டணி முறிந்துள்ளதால் 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியா
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 100வது நகராமாக ஷில்லாங் தேர்வு!!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 100வது நகராமாக மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதுவரை, 99 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 100வது நகரமாக மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா
மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு 18 சதவீத அகவிலைப்படி உயர்வு!!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த சலுகையும் இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பள்ளி ஊழியர்கள் உள்பட மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 18 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் முயற்சியாக இந்த அறிவிப்பு சரியாக திட்டமிட்டு செயல்படுவற்காக முன்கூட்டியே அறிவித்ததாக மம்தா விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
120 பேரை பசியாற்றும் ஆம்பூர் உணவு வங்கி!!
ஆம்பூரில் தினமும் 120 பேருக்கு ஆம்பூர் உணவு வங்கி இலவசமாக உணவு வழங்கி வருகிறது. பிரியாணிக்குப் பெயர்பெற்ற ஆம்பூரில், இளைஞர் அமைப்பினர் 25 பேர் சேர்ந்து ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாபு சம்பத் மற்றும் இவரது உறவினர்கள் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்க ஆரம்பித்தனர். இவர்கள், சொந்த செலவில் உணவு, தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றவர்களை தேடிச் சென்று வழங்கி வந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பாபு பிரபுதாஸ் என்பவர் உணவு சமைப்பதற்குத் தனது சொந்த கட்டடத்தை இலவசமாக வழங்கியுள்ளார். ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தக் கட்டடத்தில், கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் சமைக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு, 12 பேர் மாதந்தோறும் தலா ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். ஆம்பூர் இந்து உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை பாரதியும் இந்தக் குழுவில் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 149 தமிழ் திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் மானியம்!!
குறைந்த செலவில் தயாரித்து கடந்த 8 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 149 தமிழ் திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்ப் படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆர்.ரகுபதி மற்றும் டி.வி.மாசிலாமணி தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இத்தேர்வுக்குழுவினர் கடந்த 2007-ம் ஆண்டுக்கு 14 திரைப்படங்கள், 2008-ல் 18, 2009-ல் 22, 2010-ல் 21, 2011-ல் 17, 2012-ல் 22, 2013-ல் 12, 2014-ல் 23 திரைப்படங்கள் என 8 ஆண்டுகளில் 149 திரைப்படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
தேர்வு செயயப்பட்ட 149 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.10 கோடியே 43 லட்சம் மானிய தொகை வழங்குவதற்கு அடையாளமாக 10 பேருக்கு காசோலைகளை வழங்கி முதல்வர் கே.பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உலகம்
அகதிகள் விவகாரத்தில் முக்கிய கொள்கை முடிவை கைவிட்டது அமெரிக்கா!!
குடும்பங்களைப் பிரித்து வைக்கும் எண்ணமில்லை என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ அகதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க எல்லையை கடந்து வரும் அகதிகளை கைது செய்து அவர்களின் குழந்தைகளை மட்டும் தனியாக அடைத்து வைத்ததற்காக டிரம்ப் அரசு மீது ஐநா.மனித உரிமைக் கவுன்சில் கடும் அதிருப்தியை வெளியிட்டது. உலகம் முழுவதும் கண்டனங்களும் வலுத்தன.
திடீரென இஸ்ரேல் பிரச்சினையை குறிப்பிட்டு ஐநா.மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து விலகிய அமெரிக்கா, தனது கொள்கை முடிவை தளர்த்தியிருக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்க விரும்பவில்லை என்று அறிவித்தார். அதே சமயம், வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வருவதை அனுமதிக்க முடியாது என்றும், எல்லையை பலமாக பாதுகாப்போம் எனவும் டிரம்ப் அறிவித்தார்.
உலகம்
5 ஆண்டுகளுக்கு பின் பிரம்மாண்ட வெகுஜன விளையாட்டை நடத்த தயாராகும் வடகொரியா!!
வடகொரியா 5 ஆண்டுகளுக்கு பின், பிரம்மாண்டமாக வெகுஜன விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருப்பதாக, பெய்ஜிங் சுற்றுலா வழிகாட்டுதல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் தேசிய தினம், ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தாண்டு, தலைநகர் பியோங்யாங்கில், ஒன்றரை லட்சம் பேர் அமரக்கூடிய, ரன்கிராடோ மே தின மைதானத்தில்(Rungrado May) பிரம்மாண்ட வெகுஜன விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கு பின்னர், 5 ஆண்டுகால இடைவெளியில் நடைபெறும் இந்த வெகுஜன விளையாட்டில், வடகொரியாவின் பாரம்பரிய கலை நடனங்களுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறும்.
விளையாட்டு
யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி
யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றதால் ரோகித் சர்மா 23-ந்தேதி சக வீரர்களுடன் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.
விளையாட்டு
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக்கிற்கான திட்டத்தை வெளியிட்டது ஐசிசி
ஐசிசி தனது நீண்டநாள் கனவான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகியவற்றிற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் இன்றும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு ஐசிசி டெஸ்ட் லீக் தொடருக்கு அனுமதி அளித்தது. ஐசிசி தரவரிசையில் முதல் 9 இடத்தில் இருக்கும் அணிகள் இந்த லீக்கில் விளையாட அனுமதிபெறும். ஒவ்வொரு அணிகளும் தலா 6 தொடரில் விளையாட வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.
ஐசிசி ஒருநாள் லீக்கில் தற்போது தரவரிசையில் இருக்கும் 13 அணிகளுடன், உலகக்கோப்பை லீக் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் இடம்பெறும். இதில் ஒவ்வொரு தொடரில் மூன்று போட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த லீக் 2020 முதல் 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாத் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடருக்குள் வராது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ
சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஸ்பெயின் நாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அடித்தவர்கள் பட்டியலில் 84 கோல்களுடன் அடித்து ஹங்கேரி வீரர் பெரென்ஸ் புஸ்காஸ் உடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார்.
மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ரொனால்டோவின் கோல் 85 ஆக உயர்ந்து. அத்துடன் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஈரானைச் சேர்ந்த அலி டயெய் 109 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வரலாறு படைத்த இந்திய சிறுவன்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷி தேஜ் என்ற 10 வயது சிறுவன் வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான்.
32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. பொதுவாக ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் வீரர்கள் மைதானத்திற்குள் செல்லும் போது அவர்களுடன் கை கோர்த்தபடி சிறுவர்-சிறுமிகள் செல்வார்கள். அதோடு போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை நடுவர் சுமந்து செல்வார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ரிஷி தேஜ் என்ற சிறுவன் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான். உலகக்கோப்பை போட்டிகளில் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்ற முதல் இந்திய சிறுவன் என்ற பெருமையை ரிஷி தேஜ் பெற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நதானியா ஜான் என்ற 11 வயது சிறுமிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 22ம் தேதி பிரேசில்- கோஸ்டா ரிகா அணிகள் மோதும் போட்டியின் போது வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து செல்லும் பெருமையை தமிழகத்தை சேர்ந்த சிறுமி நதானியா ஜான் பெறவுள்ளார்.
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 மில்லியன் டாலர்கள் மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது. 11-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி 2 ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்ற 8 அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு:
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்
2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 62 மில்லியன் டாலர்கள்
3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 54 மில்லியன் டாலர்கள்
4. மும்பை இந்தியன்ஸ் - 53 மில்லியன். டாலர்கள்
5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 49 மில்லியன் டாலர்கள்
6. டெல்லி டேர்டெவில்ஸ் - 44 மில்லியன் டாலர்கள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டாலர்கள்
8. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்
அந்த தகவலின்படி ஐ.பி.எல். தொடரின் மொத்த பிராண்ட் மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இது கடந்த 11 ஆண்டுகளை விட 37% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
பந்தை சேதப்படுத்திய விவகாரம் இலங்கை கேப்டன் சந்திமல் விளையாட தடை
வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சந்திமல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
ரஷிய உலக கோப்பையில் முதல் சிவப்பு அட்டை
ரஷிய உலக கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார்.
ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரில், முதல் சிவப்பு அட்டை எச்சரிக்கை நேற்று நிகழ்ந்தது.
ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் 3-வது நிமிடத்தில் கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரரான கார்லோஸ் சாஞ்சஸ், அடுத்த போட்டியில் விளையாட முடியாது.
உலக கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 2-வது அதிவேக சிவப்பு அட்டை இதுவாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக உருகுவே வீரர் ஜோஸ் பாடிஸ்டா முதல் நிமிடத்தில் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளானதே இந்த வகையில் முதலிடத்தில் இருக்கிறது.
விளையாட்டு
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை..!
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர்.
2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 444 ரன்கள் குவித்ததே இங்கிலாந்து அணியின் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்து இருக்கிறது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
பொறுப்பிலிருந்த அமித் ஜெயின் ஆசிய பசிபிக் பகுதியின் தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து பிரதீப் பரமேஸ்வரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உபேரின் காப்பீட்டுத் திட்டம் போன்ற பாதுகாப்பு முயற்சிகளிலும், இந்திய அளவில் முதன்முதலாக ’ரைடு ஷேரிங்’ திட்டத்தைச் செயல்படுத்தியதில் பரமேஸ்வரனின் பங்களிப்பு இதில் அடங்கியுள்ளது.
சுற்றுச்சூழல்
மரம் நடும் மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை: ஹரியாணா அரசு அறிவிப்பு
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், ஹரியாணாவில் மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மரங்களை நடும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் அளித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.
இத்திட்டத்தின் கீழ், எத்தனை மரக்கன்றுகளை வேண்டுமானாலும் மாணவர்கள் நடலாம். அதன்படி, அவர்கள் நடவுச் செய்த மரங்களுக்கு, ஊக்கத்தொகையாக தலா ரூ.50 வீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக வழங்கப்படும். வரும் ஜூலை 20-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஹரியாணாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
விருதுகள்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது !
கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றிவரும் மதுரை மாவட்டம் பில்லுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த களஞ்சியம் பெண்கள் சுயஉதவிக் குழு அமைப்பின் தலைவர் பெ.சின்னப்பிள்ளை பெருமாளுக்கு 2018-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்கப்பட்டது.
முதல்வர் கே.பழனிசாமி இந்த அவ்வையார் விருதை வழங்கி, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றையும் வழங்கினார். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்த, ஆண்டுதோறும் ஒரு பெண்ணுக்கு, சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ‘ அவ்வையார் விருது’ வழங்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி கடந்த 2012 முதல் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை பெருமாள் (வயது 66), களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றி வருகிறார். களஞ்சியம் இயக்கத்தின் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு கல்விக் கடன், விவசாயக் கடன் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு, மாடு வளர்க்க கடன் பெறுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விருதுகள்
பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!!
மனித குலத்துக்கு ஒப்பற்ற பங்களிப்பு அளித்தமைக்காக பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்த சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
வர்த்தகம்
Mercedes-Benz நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்கத் திட்டம்!!
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் கார்களை இந்தியாவின் புனேவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எரிபொருள் எஞ்சின் பயன்பாட்டைத் தவிர்த்து, மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தங்கள் நிறுவனம் உற்று நோக்கி வருவதாகக் கூறியுள்ள மெர்சிடஸ் பென்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தையிடல் துறை துணைத் தலைவர் மைக்கேல் ஜாப் (Michael Jopp) தெரிவித்துள்ளார்.
புனேவின் சக்கான் (Chakan) பகுதியிலுள்ள தொழிற்சாலையில் மின்சாரத்தால் இயங்கும் பென்ஸ் கார்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சட்டம் / மசோதா
கஞ்சா பயன்பாட்டை அனுமதித்துக் கனடாவில் சட்டம் இயற்றப்பட்டது!!
கனடாவில் கஞ்சா பயன்பாட்டை அனுமதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கனடாவில் 1933ஆம் ஆண்டில் இருந்து கஞ்சா பயிரிடுவது விற்பது பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
2001ஆம் ஆண்டு மருத்துவத்தில் மயக்க மருந்தாகக் கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. உருகுவேயில் 2013ஆம் ஆண்டு முதல் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பயிரிடுவது விற்பது பயன்படுத்துவது ஆகியவற்றை அனுமதிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றத்தின் மேலவையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாகப் பெரும்பாலோர் வாக்களித்ததால் சட்டம் நிறைவேறியுள்ளது.
இதனால் சட்டப்படி ஒவ்வொரு வீட்டிலும் 4 கஞ்சா செடிகள் வளர்க்கலாம். ஒருவர் 30கிராம் வரை உலர்ந்த கஞ்சாவை வைத்திருக்கலாம். இன்னும் 3மாதங்களில் சட்டம் நடைமுறைக்கு வரும்போது உரிமம்பெற்ற விற்பனையாளர்களிடம் கஞ்சாவை விலைக்கு வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நியமனங்கள்
சிக்கிம் அரசின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், சிக்கிம் மாநில அரசின் திட்டங்களை பிரபலப் படுத்தும் துாதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை தெரிவித்துள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா , மாநில அரசின், திட்டம் சாதனைகளை, தேசிய, உலக அளவில், ரஹ்மான் பிரபலப்படுத்துவார் எனவும் தெரிவித்தார்.
நியமனங்கள்
காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்
காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தலைமை செயலாளராக சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.
இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐபிஎஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு கட்டுரை
உலகிற்கு இந்தியா அளித்த கொடை யோகா..! யோகாவின் சிறப்புகள்...
உலகம் முழுவதும் ஜுன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உலகிற்கு இந்தியா அளித்த கொடைதான் யோகா! உடலையும், மனத்தையும், உள்ளத்தையும் ஒருங்கிணைத்து,
அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது இதன் தனிச்சிறப்பு!
மன சஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே தொழில், உடலை வருத்திக் கொள்வதே கொள்கை என சோகம், கோபம், பதற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், மூட்டு வலி என ஒரு கட்டத்தில் நோய்கள் இவர்களைத் தேடி வருகின்றன. இவற்றில் சிக்காமல் உடலைப் பாதுகாப்பதுதான் யோகா பயிற்சி!
உடலுக்கு உகந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சியும் சேரும்போது உடலும் மனமும் வலுவடைகின்றன. ஆசனம், பிராணாயமம், தியானம் இவற்றைத் தொடர்ச்சியாக செய்வதால் உடல் உறுப்புகள் தூய்மையாகி சீராக இயங்குகின்றன.
சீரான மூச்சுக்கும், நாடித்துடிப்புக்கும், உதவுகிறது யோகா பயிற்சி! கூடும் ரத்த அழுத்தத்தை குறைத்து, எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது யோகா பயிற்சி! உடலையும், மனத்தையும் உறுதியாக்கி எதையும் தாங்கும் பக்குவத்தையும், நோய்களை நெருங்கவிடாத எதிர்ப்பு சக்தியையும் கிடைக்கச் செய்கிறது யோகா பயிற்சி! முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போட வைக்கிறது யோகா பயற்சி!
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மையாக்கும் யோகா பயிற்சியை செய்வது ஒவ்வொருவருக்கும் அவசியம்! தினசரி யோகா செய்தால் முதுமையில் இருந்தும், நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்பது நிச்சயம்!
தரவரிசை
உலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.
அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.
தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
உலக பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.
நீண்ட காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பிடித்திருந்தார். தற்போது அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக பெர்னாட் அர்னால்ட் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது (சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலர்) வாரன்பப்பெட்4-வது இடத்தை பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர்.
பேஸ்புக் நிறுனர் மார்க் ஷுகர்பெர்க் 5-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலர். உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானிக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இவர் ரிலையன்ஸ் இண்டர்ட்ரீங் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மானேஜிங் டைரக்டராக இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 39.6 பில்லியன் டாலர். தற்போது இவர் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார்.
தரவரிசை
பார்முலா ஒன் 2018 - செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்திற்கு முன்னேற்றம்
கனடா கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், இந்தாண்டுக்கான பார்முலா ஒன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2018-ம் ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தய போட்டிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கனடா கிராண்ட் பிரிக்ஸ் போட்டி சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பெராரி அணிக்காக களமிறங்கிய ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். இது கனடாவில் அவர் முதலிடம் பிடிப்பது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது ரெட் புல் அணிக்காக பங்குபெற்ற அவர் முதலிடம் பிடித்தார்.
கனடாவில் பெராரி அணி 2006-ம் ஆண்டுக்கு பின் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டுக்கான பார்முலா ஒன் புள்ளிப்பட்டியலில், செபாஸ்டியன் வெட்டல் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இது இந்தாண்டில் அவரது மூன்றாவது வெற்றியாகும். முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் பஹ்ரைனில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளிலும் அவர் முதலிடம் பிடித்தார். இந்த பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் பின் வால்ட்டேரி போட்டாஸ் இரண்டாவது இடத்தையும், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டப்பென் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பார்முலா ஒன் பந்தயங்களில் 7 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் செபாஸ்டியன் வெட்டல் 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவிஸ் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வால்ட்டேரி போட்டாஸ் 86 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
புத்தகம்
நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்
'அன்பினிஸ்ட்' என்ற இந்த புத்தகத்தில் பிரியங்காவின் வாழ்க்கை குறித்த கட்டுரைகள், கதைகள் மற்றும் அவர் குறித்த கருத்துகள் போன்ற இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். இதனை அமெரிக்காவில் பலண்டைன் புக்ஸ் நிறுவனமும், பிரிட்டனில் மிச்செல் ஜோஷப் நிறுவனமும் வெளியிட உள்ளது.
பாலிவுட்டில் தனி இடத்தை கைப்பற்றி, ஹாலிவுட்டிலும் சிறந்து விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர்.
17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா அதே ஆண்டு உலக அழகி பட்டத்தையும் வென்றார். அதன் மூலம் இந்தி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டில் குவாண்டிகா என்ற டிவி தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா இரண்டு முறை சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதினை பெற்றுள்ளார். நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகி, யுனிசெப்பின் நல்லெண்ண தூதர் போன்ற பன்முகங்கள் கொண்ட பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
முக்கிய தினம் / வாரங்கள்
ஜூன் 20 - உலக அகதிகள் தினம்
உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 தேதியின்று கொண்டாடப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆப்பிரிக்கா அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
Comments
Post a Comment