நடப்பு நிகழ்வுகள் 16 - 06 - 2018
அறிவியல் தொழில்நுட்பம்:
கூகுள் மேப்பில் வந்தாச்சு புது வசதி!
கூகுள் மேப்பில் தற்போது புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
மக்கள் வெளியில் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் யாரிடமாவது வழி கேட்டு செல்வதெல்லாம் பழைய ஸ்டைல். தற்போது அந்த வேலையை கூகுள் மேப்பே இலகுவாக செய்து வருகிறது.
தற்போதுள்ள கூகுள் மேப்பில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பதிவிட்டால் மட்டுமே போதும், அந்தப் பகுதிகளை இணையம் மூலம் இந்தச் செயலி சரியாகக் காட்டிவிடும். இதனால் யாரிடமும் நின்று வழி கேட்டு நேரத்தை வீணடிக்காமல், செல்லவேண்டிய இடத்திற்குச் சரியாகச் செல்லமுடிகிற வசதிகளை கூகுள் மேப் தருகிறது.
இந்த வசதியை மேம்படுத்தும் வகையில் கூகுள் மேப், சார்ட்கட்ஸ் வசதிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக பயனாளர்களே எடிட் செய்யும் வசதி, பயனர் பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தானாகவே காட்டும் வசதி ஆகியவற்றை வழங்கியது இதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதில் புதிய ஒரு வசதியாக குயிக் ஆப்ஷன் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் மேப். இதனால் இனி மேப்பில் ஒரு இடத்தை தேடுவதானது இன்னும் எளிமையாகிறது. இவ்வசதியால் ஒரே நேரத்தில் ஹோம் பட்டன் மற்றும் ப்ரீஃகேஸ் குறிப்புகளை பயன்படுத்த முடியும். இது அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இல்லைதான் என்றாலும் மேப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு அவசர நேரத்தில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அறிவியல் தொழில்நுட்பம் 1 :
மரத்தின் பிசினில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று உயிரினம்!
மியான்மர் நாட்டில், டைனோசர் காலத்தில் தவளை இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிலநேரங்களில் மர பிசின்களில் சிக்கி தவளைகள் உயிரிழக்க நேரிடும். அவ்வாறு, 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மரத்தின் பிசினில் சிக்கி இறந்து போன, தவளையின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை தவளைகள், டைனோசர்களின் இறுதி காலக் காட்டங்களில் வாழ்ந்தவை. இதன்மூலம் தவளை, தேரை வகைகள் வெப்ப மண்டலக் காடுகளில் இருந்து மழைக்காடுகளில் வாழும் பரிணாம வளர்ச்சியை அடைந்திருப்பது தெரியவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அறிவியல் தொழில்நுட்பம் 2 :
மிகப்பெரிய கருந்துளை ஒன்று, நட்சத்திரத்தை விழுங்கியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு !
15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மிகப்பெரிய கருந்துளை ஒன்று, நட்சத்திரத்தை விழுங்கியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உள்ள அகச்சிவப்பு மற்றும் மின்காந்த அலைகளுக்கான தொலை நோக்கி மூலம் இந்த நிகழ்வை அவர்கள் கண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது சூரிய ஒளியில் இருந்து ஆண்டு முழுவதும் வெளியாகும் ஆற்றலைக் காட்டிலும் 125 பில்லியன் மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்ட வாயு வெளியேறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருந்துளையை தொடர்ந்து ஆய்வு செய்தால் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதற்கான விடை கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கலை / கலாச்சாரம்:
கோலாகலமாக கொண்டாடப்படும் ரம்ஜான்!
நாடு முழுவதும் இன்று(ஜூன் 16) ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய மக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, அதன் நிறைவு நாளான இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய மக்கள் காலையிலே எழுந்து குளித்து,புத்தாடை அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை செய்தனர். மேலும், அண்டை வீட்டார்களுக்கு இனிப்பு வழங்கியும், கட்டித் தழுவியும் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
டெல்லியில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதியிலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ரதபோராவில் உள்ள மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தில் நாகை, நாகூர், திருச்சி, விருதுநகர், சென்னை மயிலாப்பூர் கச்சேரி மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு, உடை வழங்கியும் தங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பகையை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறி கொள்வர்.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு இருநாட்டு ராணுவ வீரர்கள் காலையில் கொடி ஏற்றுவதையும், மாலையில் இறக்குவதையும் காண பல சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
அதுபோன்று, ரம்ஜான் பண்டிகைக்கு இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம். தற்போது, காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால்,ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாறி கொள்ளவில்லை.
விளையாட்டு:
யோயோவால் பறிபோன இரண்டு ஆண்டுக் கனவு!
யோயோ உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் குறுவடிவ ஆட்டத்திற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 32 வயதான அம்பத்தி ராயுடு இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற யோயோ தேர்வில் தேர்ச்சி பெறாததால் இங்கிலாந்து தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான மாற்று வீரர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இவருக்குப் பதிலாக யோயோவில் தேர்ச்சி பெற்ற சுரேஷ் ரெய்னா அல்லது ரிஷப் பந்த் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அம்பத்தி ராயுடு, 16 ஆட்டங்களில் பங்கேற்று 149.75 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 602 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் சென்னை அணி சார்பில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் ராயுடுவுக்கு கிடைத்த வாய்ப்பு, தற்போது யோயோ தேர்வால் பறிபோயுள்ளது.
முன்னதாக யோ-யோ தேர்வில் தோல்வியடைந்த சஞ்சு சாம்சன் இங்கிலாந்து முத்தரப்பு தொடருக்கான “இந்தியா ஏ” அணியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். அதே போல் முகமது ஷமியும் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு:
ஜூலை 15ஆம் தேதி முதல் நூலகங்களில் IAS பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...!
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விரைவில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு, சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட இருப்பதாக கூறினார்.
வர்த்தகம் :
2 ஆண்டுகளாக செயல்படாத 30 சதவீத இந்திய நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போலி நிறுவனங்களை கண்டறிந்து மூட மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனங்கள் சட்டத்தில் 248-வது பிரிவை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்து ஒருவருடத்துக்குள் தொழிலைத் தொடங்காவிட்டாலோ 180 நாட்களுக்குள் மூலதனத்தை திரட்டாவிட்டாலோ 2 வருடங்களுக்கு மேல் செயல்படாமல் இருந்தாலோ அந்த நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ய முடியும்.
வர்த்தகம் 1 :
2017-2018 நிதியாண்டில் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்த தொகை 1.2லட்சம் கோடி ரூபாய்!
2017-2018நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தள்ளுபடி அளித்ததால் வங்கிகளின் 34,630கோடி ரூபாய் இலாபமும் பறிபோய் அதற்கு மேல் 85ஆயிரத்து 370கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெறாமல் வாராக்கடனாகக் காட்டுவது, வாராக்கடனால் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க இலாபத்தில் இருந்து தொகை ஒதுக்குவது, பின்னர் வாராக்கடனைப் போக்கெழுதியதாக அறிவித்துத் தள்ளுபடி செய்வது இந்த நடவடிக்கைகளால்தான் வங்கிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது என வங்கிப் பணியாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரியும்.
கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த நட்டம் 85ஆயிரத்து 370கோடி ரூபாயாகும். இந்நிலையில் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்த தொகை ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாயாகும். இது வங்கிகளின் நட்டத்தைவிட 140விழுக்காடு அதிகமாகும்.
வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்யாமல் இருந்தால் 34,630கோடி ரூபாய் வங்கிகளின் லாபக் கணக்கில் வந்திருக்கும். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் நாற்பதாயிரத்து 196கோடி ரூபாய் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்துள்ளது.
இது அனைத்து வங்கிகளின் தள்ளுபடித் தொகையில் 25விழுக்காடாகும். கனரா வங்கி எட்டாயிரத்து 310கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கி ஏழாயிரத்து 407கோடி ரூபாயும் பரோடா வங்கி நாலாயிரத்து 948கோடி ரூபாயும் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்துள்ளன. 2016-2017நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 474கோடி ரூபாயாகும்.
வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடிசெய்யப்பட்ட தொகை 81ஆயிரத்து 683கோடி ரூபாயாகும். தள்ளுபடி செய்யாமல் இருந்திருந்தால் 2016-2017நிதியாண்டில் நிகர லாபம் 82ஆயிரத்து 157கோடி ரூபாயாக இருந்திருக்கும்.
வர்த்தகம் 2 :
2019ல் ஆண்டிராய்டு 2.1, 2.2 போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது...!
ஆண்டிராய்டு 2.1 மற்றும் 2.2 ஆகியவற்றில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், நடப்பாண்டுக்குப் பிறகு வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் காலத்தில் வாட்ஸ் ஆப்பில் சில அம்சங்களை மேம்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. அவ்வாறு மேம்படுத்தும்போது, பழைய ஆண்டிராய்டு வெர்சன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இயங்குவதில் சிரமம் ஏற்படும் என்றும், இதனால், வரும் 2019ஆம் ஆண்டு முதல் அந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி, ஐபோன் 3ஜி.எஸ்., iOS 6ல் இயங்கும் ஐபோன்கள், நோக்கியா எஸ்40, நோக்கியா asha சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் இது பொருந்தும் என கூறியுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், அத்தகைய ஸ்மார்ட்போன்களின் இயங்குதளத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா :
IIT நுழைவுத் தேர்வு முறையை எளிதாக்க மத்திய மனித வளத்துறை பரிந்துரை!
ஐஐடி கல்வி நிறுவங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எளிய முறையில் மாற்றியமைக்குமாறு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
ஐஐடி எனப்படும் உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின்ஸ் (JEE Mains) மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் (JEE Advanced) என்ற இரு கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டு பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முறை கடினமாக இருப்பதால், சுமார் ஆயிரம் இடங்கள் நிரப்ப முடியாமல் போகக் கூடும் எனக் கருதப்படுகிறது.
புதிய ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முறையை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய மனிதவளத்துறை, ஐஐடி கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனால், கான்பூர் ஐஐடியில் நடைபெறும் அடுத்த ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MINI CINI - TNPSCPNUSEN.BLOGSPOST.COM
Comments
Post a Comment