####அறிவோம்####
 
கண்ணன் பாட்டு | 10. கண்ணன் என் காதலன்.
 
கண்ணன் பாட்டு
10. கண்ணன் என் காதலன்.
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ! . ... 1
பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். ... 2
உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. ... 3
பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். ... 4
கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . ... 5
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! ... 6
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! ... .7
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment