####அறிவோம்####
கண்ணன் பாட்டு | 13. கண்ணன் என் காதலன் -4.
கண்ணன் பாட்டு
13. கண்ணன் என் காதலன் -4.
(பாங்கியைத் தூது விடுத்தல்)
தங்கப்பாட்டு மெட்டு
ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். . ... 1
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். . ... 2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை
யாவும் தெளிவுபெறக் கோட்டு விடடீ!. ... 3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். ... 4
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம். ... 5
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! ... 6
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே. ... 7
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்! ... 8
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment