####அறிவோம்####
கண்ணன் பாட்டு | 5. கண்ணன் என் அரசன்.
கண்ணன் பாட்டு
5. கண்ணன் என் அரசன்.
பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். ... 1
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . ... 2
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். ... 3
கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். ... 4
வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். ... 5
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? ... 6
நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். ... 7
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்வான். . ... 8
காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். ... 9
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். ... 10
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! . ... 11
கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். ... 12
நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். ... 13
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! ... 14
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment